விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே பாயும் பெண்ணையாறு ஆற்றுப் பகுதியில் அடிக்கடி மணல் திருட்டு நடப்பதால் போலீசார் அங்கு திடீர் சோதனை மேற்கொள்வர். அவ்வாறு சோதனை மேற்கொள்ளும் போது அனுமதியின்றி மணல் அள்ளிச் செல்லும் டிராக்டர், டிப்பர், லாரி மற்றும் மாட்டு வண்டிகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு வந்து நிறுத்தி வைப்பார்கள். இது சம்பந்தமான வழக்கு முடியும் வரை காவல் நிலையத்திலேயே அந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும். வழக்கு முடிவடைந்த பிறகு சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஒப்படைக்கப்படும்.
இந்நிலையில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அப்பகுதியில் உள்ள இளந்துறை கிராமத்தைச் சேர்ந்த அருள் என்பவரின் டிராக்டர் டிப்பர் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக கூறி மாவட்ட தனிப்படை போலீசார் அவரது டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 21 ஆம் தேதி திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது டிராக்டர் டிப்பர் எந்த நிலையில் இருக்கிறது என்பதை பார்த்து வருவதற்காக காவல் நிலையம் சென்றுள்ளார் அருள். அங்கு சென்று பார்த்தபோது பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் இருந்த இடத்தில் அவரது டிராக்டர் மட்டும் நின்றிருந்தது அதனுடன் இணைக்கப்பட்டிருந்த டிப்பரை காணவில்லை.
இது குறித்து அருள் போலீசாரிடம் கேட்டபோது அவர்கள் உரிய பதிலை கூறவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அருள் காவல் நிலையத்தில் களவு போன தனது டிப்பரை கண்டுபிடித்து தரக்கோரி அதே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது புகாரை போலீசார் வாங்காமல் இரண்டு நாட்கள் அலைக்கழித்து திருப்பி அனுப்பி உள்ளனர். காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த வாகனம் காணாமல் போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.