Skip to main content

விழுப்புரம் நகராட்சியில் டெண்டர் தகராறு... ஒப்பந்தக்காரர் மீது தாக்குதல்!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

Vilupuram municipal problem


விழுப்புரம் பழைய பஸ் நிலைய பகுதியில் ஏற்கனவே நகராட்சி மூலம் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்ட கடைகள், ஆண்டுகள் பல கடந்துவிட்டதால் சீர்கெட்டு இருந்தன. இதையடுத்து புதிதாக அந்தப் பகுதியில் சுமார் 78 கடைகள் கட்டுவதற்கு நகராட்சி மூலம் டெண்டர் கோரப்பட்டது.

 

இதில், பங்கேற்கும் ஒப்பந்தக்காரர்கள் தனித்தனியாக டெபாசிட் தொகையை வங்கிகள் மூலம் டி.டியாக எடுத்து நேற்று மாலைக்குள் நகராட்சி அலுவலகத்தில், டெண்டர் பத்திரத்துடன் இணைத்து ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, டெண்டர் விண்ணப்பங்களை நகராட்சியில் செலுத்துவதற்காக நேற்று காலை முதல் ஒப்பந்தக்காரர்கள், அரசியல் பிரமுகர்கள், வணிகர்கள் என பல்வேறு தரப்பினர் நகராட்சி அலுவலகத்தில் குவிந்தனர். 


நேற்று மாலை 4 மணி வரை டெண்டர் கேட்டு 300க்கும் மேற்பட்டவர்கள் வங்கி வரைவோலையுடன் விண்ணப்பங்களைச் செலுத்தினார்கள். இன்று நடைபெறுவதாக இருந்த டெண்டர் ஏலம் நகராட்சி நிர்வாகக் காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுவதாக நகராட்சி கமிஷனர் தட்சிணாமூர்த்தி அறிவித்துள்ளார். இதற்கான நோட்டீசை நகராட்சி ஊழியர்கள் அலுவலக முகப்பில் ஒட்டினார்கள். இதைக்கண்ட மந்தக்கரை பகுதியைச் சேர்ந்த ஒப்பந்தகாரர் அகமது என்பவர் கமிஷனர் அறைக்குள் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ‘ஏன் திடீரென ஏலம் நிறுத்தப்படுகிறது’ என்று கோபத்துடன் கேட்டுள்ளார். அப்போது அங்கு இருந்த அரசியல் கட்சியினருக்கும் அகமது விற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் அகமது சரமாரியாக தாக்கப்பட்டு அவரது சட்டை கிழிந்தது. இந்நிலையில், அகமதுவின் நண்பர்கள் அவரை மீட்டு விழுப்புரம் டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 


இந்தச் சம்பவத்தையடுத்து அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்ததாகவும் ஆபாசமாகப் பேசியதாகவும் கமிஷனர் தட்சிணாமூர்த்தி, டவுன் போலீசில் அகமது மீது புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து அகமதுவை கைது செய்தனர்.
 

 

 

சார்ந்த செய்திகள்