காவல்துறையினரின் மன அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிபாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட காவல்துறையினரின் பிறந்தநாள், திருமணநாள் ஆகியவற்றிற்கு வாழ்த்து அட்டைகள் அனுப்பி விடுமுறை அளித்து உற்சாகமூட்டும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் ஆக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார் ராதாகிருஷ்ணன். பொதுவாகவே காவல்துறையினரின் பிறந்தநாள் மற்றும் திருமணநாளின் போது குடும்பத்தினருடன் செலவிட முடியாத சூழ்நிலை நிலவிவருகிறது. இது போன்ற நிகழ்வுகளில் கூட வீட்டில் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாமல் தொடர்ந்து பணி செய்து வருவதால் காவலர்கள் ஒருவித மன அழுத்தத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
இதனைப் போக்கும் விதமாக விழுப்புரம் காவல் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் காவலர்களின் திருமணநாள் மற்றும் பிறந்தநாள் அன்று அவர்களுக்கு விடுமுறை அளிப்பதோடு வாழ்த்து அட்டைகளைக் காவலர்களின் வீட்டுக்கே அனுப்பி வைக்கும் திட்டத்தை நேற்று முன்தினம் துவக்கிவைத்தார்.
இதுபோன்று அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதன் மூலம் காவலர்களின் மன அழுத்தம் நீங்கும். இது போன்ற நாட்களில் குடும்பத்தினருடன் அவர்கள் மகிழ்ச்சியாக இருந்து விட்டு மீண்டும் பணிக்குத் திரும்பியவுடன் நல்ல மனநிலையுடன் மகிழ்வோடு பணிகளில் ஈடுபடுவார்கள் என்ற நோக்கத்தில் இத்திட்டத்தை அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும் காவலர்களின் நலனில் அக்கறை கொண்டு இதுபோன்று பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் காவலர்கள் இருசக்கர வாகனம் ஓட்டும்போது தலைக்கவசம் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதுதொடர்பாக ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல்துறையினரின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும் என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இந்தப் புதிய முயற்சிக்குக் காவலர்கள் பலரும் வரவேற்புத் தெரிவித்துள்ளனர்.