கடலூர் மாவட்டத்தில் சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் திருமால். 1996இல் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி நேரடியாக உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்வாகினார். படிப்படியாக பதவி உயர்வு பெற்று 2016ஆம் ஆண்டு திண்டிவனம் கோட்டம் டிஎஸ்பியாகப் பொறுப்பேற்றார். குற்றச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்து பொதுமக்கள் மனத்தில் பாராட்டைப் பெற்றார்.
இதையடுத்து, விழுப்புரத்துக்கு டிஎஸ்பியாக நியமிக்கப்பட்ட திருமால், அங்கும் சட்டவிரோத செயல்களுக்கு முடிவு கட்டினார். அண்மையில் அவருக்குக் குடியரசுத் தலைவர் விருதும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகம் முழுவதும் டிஎஸ்பிக்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர். அந்தப் பட்டியலில் திருமாலின் பெயரும் இடம்பிடித்தது. திருமாலுக்கு வேறு எங்கும் பணி வழங்காமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு உடனே ரிலீவாகச் சொல்லியும் அழுத்தம் தரப்பட்டிருக்கிறது. இதற்கு சட்டவிரோதக் கும்பல்களின் அழுதமே காரணம் என்று விழுப்புரம் பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.
விழுப்புரத்தில் நேர்மையான அதிகாரிகளாக பணி செய்து மக்கள் பாராட்டை பெற்ற கோட்டாச்சியர் குமரவேலு, லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பியாக இருந்த தேவநாதன், இப்போது டிஎஸ்பி திருமால் போன்ற மக்கள் பாராட்டிய இப்படிப்பட்ட அதிகாரிகளை இரண்டு மாதத்திற்க்குள் பந்தாடிவிட்டு ஊழல் பெருச்சாளிகளையும் ஊழல் குற்றச்சாட்டில் ரைடு செய்யப்பட்ட அதிகாரிகளை இங்கேயே வைத்து கொண்டு மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஆளும் கட்சிக்கு சாதகமாக நேர்மையான அதிகாரிகள் செயல்பட மாட்டார்கள் என்பதால் அவர்களை வெளியேற்றியுள்ளது ஆளும் அரசு என்கிறார்கள் மாவட்ட மக்கள்.