விழுப்புரம் மாவட்டம், கப்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் என்பவரின் மகன் தணிகைவேல்(31). இவர், கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
அதே பகுதியைச் சேர்ந்த சங்கர்(48) என்பவர், கடந்த 2012ஆம் ஆண்டு கரும்பு வெட்டுவதற்காக பையூரைச் சேர்ந்த காத்தமுத்து என்பவரிடமிருந்து முன்பணம் பெற்றுள்ளார். இந்நிலையில், கரும்பு வெட்டும் தொழிலுக்கு தான் வருவதாக தணிகைவேல், சங்கரிடம் கூறி ஒரு தொகையை முன்பணமாக பெற்றுள்ளார். ஆனால், தணிகைவேல் கரும்பு வெட்டுவதற்கு செல்லவில்லை.
இதனால் அதே ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி பணத்தை வாங்கிக்கொண்டு வேலைக்கு வராத தணிகைவேலிடம் சங்கர் தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அப்போது சங்கர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் தணிகைவேலை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த தணிகைவேல், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்போதே உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்த புகாரின்பேரில் போலீசார் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், அந்த வழக்கு விசாரணை முடிக்கப்பட்டு நீதிபதி பூர்ணிமா, நேற்று தீர்ப்பு வழங்கினார். அதில், வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சங்கருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.