விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியில் உள்ளது ஒட்டம்பட்டு, காரை, பாலப்பட்டு ஆகிய கிராமங்கள். இந்த கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் 500க்கும் மேற்பட்டவர்கள் படிப்பதற்காக செஞ்சியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு தினசரி சென்று வருகிறார்கள்.
அப்படி செல்லும் மாணவர்கள் பஸ்ஸில் உள்ளே இடம் இருந்தாலும் உள்ளே சென்று அமர்வதில்லை.
பஸ்ஸின் பின்புறம் சரக்கு ஏற்றும் ஏணிப்படியில் ஏறி நின்று கொண்டு பயணிக்கின்றனர். அதுவும் இரண்டு பேர், மூன்று பேர் என நின்றுகொண்டு சாகச பயணம் செய்கிறார்கள். இதுபற்றி பஸ்சின் டிரைவர் கண்டக்டர்கள் பலமுறை எச்சரித்தும் கண்டித்தும் கூட மாணவர்கள் கேட்பதில்லை என்கிறார்கள் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள்.
தங்கள் உயிரை பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் பஸ்ஸின் பின்பக்கத்தில் உள்ள ஏணியில் ஏரிபயணம் செய்வது மிகப்பெரிய ஆபத்து என்பதை கூட உணர மறுக்கிறார்கள். பஸ் போகும்போது திடீரென பிரேக் அடித்தால் பின்புறம் வரும் வாகனங்கள் அந்த பஸ்ஸில் வந்து மோதினால் ஏணிப்படியில் நின்று செல்லும் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்கிறார்கள் பஸ் டிரைவர், கண்டக்டர்கள்.
இது சம்பந்தமாக மாணவர்களிடம் பலமுறை எச்சரித்தும் கேட்காமல் டிரைவர் கண்டக்டரிடம் சண்டைக்கு வருகிறார்களாம். இதன் பிறகு சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் இந்த பிள்ளைகளை கண்டித்து அவர்களை உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். எங்கள் கையில் எதுவும் இல்லை என்கிறார்கள் பஸ் கண்டக்டர்கள்.
மேலும் விழுப்புரம் செஞ்சி பஸ் ரூட்டில் ஏகப்பட்ட பஸ்கள் அந்தந்த பஸ் நிலையங்களில் ஷேர் ஆட்டோக்கள் என போக்குவரத்துக்கு நிறைய வாகன வசதிகள் இருந்தும் மாணவர்கள் ஏன் இப்படி ஆபத்தை உணராமல் பயணம் செய்கிறார்கள் என்று வேதனைப்படுகிறார்கள் அப்பகுதி பொதுமக்கள்.