
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ளது பொம்மையார்பாளையம். இந்த ஊரில் அடிக்கடி ஆடுகள் திருடு போயுள்ளது. சம்பவத்தன்று புதுச்சேரியைச் சேர்ந்த வாலிபர்கள் இருவரை கையும் களவுமாகப் பிடித்துள்ளனர் ஊர் மக்கள்.
பொம்மையார்பாளையம் பகுதியில் அடிக்கடி ஆடுகள் திருடுப் போனதுகண்டு கோபமுற்ற ஆடு வளர்ப்போர், ஆடுகளைத் திருடிச் செல்பவர்களைப் பிடிப்பதற்கு ரகசியக் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்படி நேற்று முன்தினம் ஆடுகளைத் திருடும் போது இரண்டு வாலிபர்களைச் சுற்றி வளைத்து கையும் களவுமாகப் பிடித்து ஊர்ப் பொதுமக்கள் முன்னிலையில் முட்டி போட வைத்துப் பிறகு போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீஸ் விசாரணை செய்தபோது புதுச்சேரி கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த 19 வயது பொரிதினேஷ், அவரது கூட்டாளி 18 வயது குமார், இவர்கள் இருவரும் மது குடிப்பதற்காக அவ்வப்போது திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெரியவந்தது.
அவர்களைக் கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர். இவர்களோடு இந்தத் திருட்டுச் சம்பவத்தில் மேலும் சிலருக்குத் தொடர்பு இருப்பது அம்பலமாகியுள்ளது. அவர்களையும் போலீசார் தேடி வருகின்றனர்.