விழுப்புரம் அரசு குடோனில் நள்ளிரவில் தீ விபத்து:
இலவச டிவிக்கள் வெடித்தது
விழுப்புரம் அரசு குடோனில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் மதிப்பிலான இலவச தொலைக்காட்சி பெட்டிகள் 1100 வெடித்து சிதறின. தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். கடந்த திமுக ஆட்சியில் பொதுமக்களுக்கு இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டி வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டு 90 சதவீதம் பேருக்கு வழங்கப்பட்டது. பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அடுத்து வந்த அதிமுக அரசு இலவச டிவி வழங்கும் திட்டத்தை நிறுத்தியது. மீதம் இருந்த தொலைக்காட்சி பெட்டிகள் அந்தந்த மாவட்ட தலைநகரில் உள்ள அரசு குடோன்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த 2000 வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் விழுப்புரம் நேருவீதியில் உள்ள மார்க்கெட் கமிட்டி வளாகத்தில் உள்ள ஒரு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன. நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1.30 மணியளவில் அந்த அறையில் இருந்து தீப்பிழம்புடன் கரும்புகை வெளியேறியது. இதைப்பார்த்த மார்க்கெட் கமிட்டி காவலாளி அளித்த தகவலின்பேரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். தொலைக்காட்சி பெட்டிகள் வெடித்து சிதறியதால் அருகில் செல்ல முடியவில்லை.
இதையடுத்து பொக்லைன் இயந்திரம் வரவழைக்கப்பட்டு கட்டிடத்தின் பக்கவாட்டு சுவர்கள் இடிக்கப்பட்டது. 4 மணிநேர போராட்டத்திற்கு பின் தீ அணைக்கப்பட்டது. இந்த தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாராவது தீ வைத்தார்களா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.