Skip to main content

முதல்வர் காரை மறித்து மனு கொடுக்க முயற்சி! தடுத்து நிறுத்திய காவல்துறை...

Published on 29/08/2020 | Edited on 29/08/2020
villupuram

 

விழுப்புரம் நகராட்சியில் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ளது வழுதரெட்டி. இந்தப் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை நகராட்சியில் இணைத்துள்ளனர். இந்தப் பகுதி மக்களுக்கு நகராட்சி சார்பில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு, பொது குடிநீர் குழாய் இணைப்பு செய்து தரப்பட்டுள்ளது. ஆனால் தற்போது குடிநீர் சப்ளை அவர்களுக்கு கிடைக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக சுத்தமாக இவர்களுக்கு நகராட்சி குடிநீர் வழங்கவில்லை. மிகவும் சிரமப்படும் இப்பகுதி மக்கள் நீண்ட தூரம் சென்று தண்ணீர் பிடித்து வருகிறார்கள்.

 

குடிநீர் தடையின்றி கிடைக்க கோரி அவ்வப்போது போராட்டம் நடத்தி உள்ளனர். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வருவதால் சிரமப்படுகின்றனர். அதுவும் இரண்டு மணி நேரம் மட்டுமே குடிநீர் வருவதால் அனைத்து மக்களுக்கும் குடிநீர் கிடைக்கவில்லை. அனைவருக்கும் குடிநீர் கிடைப்பதற்கு நகராட்சி நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது என்று கோபத்துடன் கூறுகின்றனர்.

 

சமீபத்தில் கடலூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் ஆய்வுப் பணிகள் செய்வதற்கு சுற்றுப்பயணம் சென்றார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. சென்னைக்கு திரும்பும் வழியில் விழுப்புரம் புறவழிச்சாலையில் அவர் வரும்போது அவரது காரை மறித்து காலி குடங்களுடன் தங்கள் குடிநீர் பிரச்சினையை சரி செய்து கொடுக்குமாறு மனு கொடுக்கப் போவதாக முடிவு செய்தனர். அதற்கான ஏற்பாடுகளையும் செய்து வந்துள்ளனர்.

 

இந்த தகவல் காவல்துறைக்கு தெரியவந்ததையடுத்து, காவல்துறையினர் அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களை தடுத்து நிறுத்தியதோடு, அவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது நகராட்சி அதிகாரிகளும் கலந்து கொண்டு, மக்களின் குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் முதல்வரை சந்தித்து மனு அளிக்கும் முடிவைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் விழுப்புரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்