சட்டமன்றத் தேர்தல் பரபரப்புகளுக்கிடையே வாக்காளர்கள் பணம் வாங்காமல் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையமும், சமூக ஆர்வலர்களும் தொடர் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். மற்றொரு பக்கம் அரசியல் கட்சி வேட்பாளர்கள் ஓட்டுக்காகப் பணம், பரிசுப் பொருட்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பேரூராட்சி காசிம்புதுப்பேட்டை மற்றும் செரியலூர் இனாம் ஊராட்சிகளில் உள்ள காசிம்புதுப்பேட்டை காதர்முகைதீன் நகர் பகுதியில் சுமார் 700 வாக்காளர்கள் உள்ளனர். இந்த கிராமப் பொதுமக்கள் சார்பில் நேற்று இரவு அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் வைக்கப்பட்டுள்ள பதாகை அந்த வழியாகச் செல்வோரை நின்று கவனிக்க வைத்துள்ளது. அந்தப் பதாகையில் "ஓட்டுக்கு வேண்டாம் நோட்டு" ஜனநாயகக் கடமையாற்றுவோம் என்று உள்ளது. ஓட்டுக்குப் பணம் கொடுப்பார்களா என்று சிலர் எதிர்பார்த்திருக்கும் நிலையில், ஓட்டுக்கு நோட்டு வேண்டாம் ஜனநாயகக் கடமையாக வாக்களிப்போம் என்று சொல்வது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அப்பகுதி இளைஞர்கள் கூறும்போது, "நம் உரிமையை விலைக்கு விற்கக் கூடாது. அப்போதுதான் நம்மிடம் வாக்கு கேட்டு வரும் வேட்பாளர்களிடம் எங்கள் கிராமத்திற்கான அடிப்படை வசதிகளை செய்துதர கேட்க முடியும். வெற்றிபெற்ற பிறகு ஒவ்வொரு அடிப்படை வசதிகளையும் நம்மால் போய் தைரியமாகக் கேட்க முடியும். இப்ப பணம் வாங்கிட்டால், பிறகு போய் மக்கள் பிரதிநிதிகளிடம் எந்த அடிப்படை வசதிகளையும் கேட்க முடியாது. அதனாலதான், இந்தப் பதாகை வைத்திருக்கிறோம். இதேபோல, ஒவ்வொரு வாக்காளரும் ஜனநாயகக் கடமையைச் செய்ய பணம் வாங்கவில்லை என்றால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத மக்கள் பிரதிநிதிகளை நிறுத்திவைத்துக் கேள்வி கேட்க முடியும்" என்றார்கள்.
இதேபோல, ஒவ்வொரு வாக்காளரும் உறுதி எடுத்தால் வேட்பாளர்களின் செலவும் குறையும், அரசு திட்டங்களை எளிமையாகப் பெறவும் முடியும்.