காட்டுமன்னார்கோவில் அருகே கண்டியன்குப்பம் ஊராட்சியில் மே தினத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மற்றும் அந்த பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஊராட்சியில் உள்ள குறைகள் குறித்து பேசினார்கள்.
அப்போது விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பிரகாஷ் கண்டியன்குப்பம் ஊராட்சி ஏரியில் கிராவல் மண்ணை வெட்டி விற்பனை செய்ததில் 25 லட்சத்துக்கு மேல் ஊழல் முறைகேடுகள் நடந்துள்ளது என்றும், மேலும் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் கிராவல் மண்ணை வெட்டி விற்பனை செய்த ஒப்பந்ததாரர்களிடம் பழுதடைந்த சாலையை சரி செய்வதாக ரூ. 25 லட்சம் ஊராட்சி தலைவர் வாங்கியுள்ளார். இதற்கு ஊராட்சி நிர்வாகத்தில் கணக்கு காட்டவில்லை. சாலையையும் போடாமல் ஊராட்சி மன்ற தலைவர் அத்தொகையை கையாடல் செய்துள்ளார் என குற்றம்சாட்டி பேசினார்.
மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வேண்டுமென்றால் தண்ணீர் வரி, வீட்டு வரி கட்டச் சொல்லி கட்டாயப்படுத்துவதாகவும், ஏழ்மை நிலையில் உள்ள சாதாரண மக்களின் புறம்போக்கு இடத்தில் உள்ள குடிசைகளை அப்புறப்படுத்த வேண்டும் என நிர்பந்தப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இது குறித்து கிராம சபை கூட்டத்தில் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவி கலித்தா மரியகொரத்தி காவல்துறையிடம் புகார் அளித்தார். பதிலுக்கு விவசாய தொழிலாளர் சங்கத்தினரும் முறைகேடுகள் குறித்து புகார் தெரிவித்தனர். பின்னர் இது குறித்து இருதரப்பினரையும் அழைத்து உரிய விசாரணை மேற்கொள்வதாக ஒன்றிய நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் உறுதி அளித்தனர். இந்நிகழ்வால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிகழ்வில் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் வட்டச் செயலாளர் வெற்றி வீரன், விவசாய சங்க வட்டத் துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.