தமிழகத்தின் வட மாவட்டங்களில் தை மாதம் அறுவடை காலங்கள் முடிந்து அதன் பிறகு மாசி மாதம் முதல் ஆவணி மாதம் வரை கிராமங்களில் தங்கள் கிராமத்தை காக்கும் அம்மன் தெய்வங்களுக்கு காப்பு கட்டி ஊர் ஒற்றுமையுடன் தீமிதி திருவிழா நடத்துவது வழக்கம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பரவல் காரணமாக கிராமங்களில் நடத்தப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த கோவில் திருவிழாக்கள் தற்போது களைகட்டி வருகின்றன. அதிலும் ஒரு கிராமத்தில் திட்டமிட்டபடி நடத்தவேண்டிய தீமிதி திருவிழாவை முன்கூட்டியே நடத்தியுள்ளனர்.
ஏன் என்று விசாரித்தபோது மிகவும் சுவாரசியமான காரணம் இருந்தது.
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகில் உள்ள நக்கம்பாடி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்தக் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலுக்கு சமீபத்தில் காப்பு கட்டி 18 நாள் மகாபாரதம் நடத்தி பதினெட்டாம் நாள் தீமிதி திருவிழா நடத்துவதற்கு திட்டமிட்டனர். அதன்படி திருவிழா தொடங்கி நடைபெற்று வந்தது. பெரும்பான்மை கிராமங்களில் கோவில்களின் திருவிழாவின் ஆரம்பத்தில் காப்பு கட்டும் வைபவம் நடக்கும் அதன்பிறகு திருவிழா முடிந்து காப்பு அவிழ்க்கும் நிகழ்ச்சி முடியும் வரை ஊரில் உள்ள அனைவரும் ஊரிலேயே வசிப்பார்கள். பகல் நேரங்களில் அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியூர்களுக்கு செல்பவர்கள் கூட இரவு எங்கும் தங்காமல் ஊருக்கு வந்து விடுவார்கள். காப்பு கட்டிய பிறகு சம்பந்தப்பட்ட ஊர்க்காரர்கள் வெளியூர் சென்று இரவு தங்குவது தெய்வ குற்றம் என்றும் அதனால் எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த இரவுக்கு முன் ஊருக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.
இப்படிப்பட்ட நிலையில், நக்கம்பாடி கிராமத்தில் கோவில் தீமிதி திருவிழா வரும் வெள்ளிக்கிழமை (8ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு, இன்று (6ஆம் தேதி) வெளியூரில் திருமணம் நடத்த திட்டமிட்டு, அதற்காக முன்கூட்டியே திருமண நிச்சயதார்த்தமும் நடத்தி இருந்தனர்.
வெளியூரில் திருமணம் செய்து கொள்ள போகும் பெண் முதல் நாளே மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்பி வைப்பது வழக்கம். கோவில் திருவிழா காப்பு கழட்டுமுன் எப்படி மணப்பெண்ணை அனுப்புவது என்ற சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் ஒன்றுகூடி அமர்ந்து பேசினர். அதன்படி தங்கள் கிராமத்துப் பெண் வெளியூர் சென்று திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ வேண்டும் அதற்கு கோயில் திருவிழா ஒரு தடையாக இருக்கக்கூடாது. எனவே, திருமண தேதியை மாற்றி வைக்க முடியாத காரணத்தால், 8ம் தேதி வெள்ளிக்கிழமை நடத்தவேண்டிய தீமிதி திருவிழாவை முன்கூட்டியே நடத்தி முடித்து காப்பு அவிழ்ப்பது என முடிவு செய்தனர்.
அதன்படி காப்பு கட்டி 14-வது நாளான நேற்று (5ஆம் தேதி) தீமிதி திருவிழா நடத்தி சாமி காப்பு அவிழ்க்கப்பட்டது. அதன் பிறகு திட்டமிட்டபடி அந்தப் பெண் அழைப்பு நடைபெற்று இன்று திருமணம் நடைபெற்றுள்ளது.
இதுகுறித்து ஊர் முக்கியஸ்தர்கள், ‘எந்த தெய்வமும் ஊர் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் காவல் தெய்வமாக எங்களை காத்து வருகிறார்கள். அதனால் திரெளபதி அம்மனுக்கு முன்கூட்டியே தீமிதி திருவிழா நடத்தி ஒரு பெண்ணின் திருமணம் தடைபடாமல் குறிப்பிட்ட தேதியில் நடத்தப்பட்டது. எங்கள் கிராம மக்கள் அனைவருக்கும் சந்தோஷம்” என்கிறார்கள். மேலும், இந்த சம்பவம் நக்கம்பாடி கிராம மக்களின் ஒற்றுமையைக் காட்டுகிறது என்றார்கள்.