
"இந்த வேலை கிடைக்கணும்னா... ஒழுங்கா சைக்கிள் ஓட்ட தெரியணும்" கிராம உதவியாளர் பணிக்காக தட்டுத் தடுமாறி சைக்கிள் ஓட்டும் பெண் விண்ணப்பதாரர்களின் வீடியோ தற்போது மக்கள் மத்தியில் அதிகளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முழுவதும் கிராம நிர்வாக உதவியாளர் பணிக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்று வருகிறது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான திப்பம்பட்டி, சேர்வகாரன்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம், கஞ்சம்பட்டி உள்ளிட்ட 9 கிராமங்களில் கிராம உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தப் பணியிடங்களை நிரப்புவதற்காக, கடந்த அக்டோபர் மாதம் தமிழக அரசு சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனைமலை வட்டத்திலிருந்து பெண்கள், இளைஞர்கள் என தங்கள் சுய விபரங்களுடன் 262 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று எழுத்துத் தேர்வு நடந்து முடிந்தது.
அதில், தேர்வு செய்யப்பட்ட 171 நபர்களுக்கு கடந்த 9 ஆம் தேதியன்று ஆனைமலை வட்டாட்சியர் ரேணுகாதேவி தலைமையில் நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில், சமூக பாதுகாப்பு தனி வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் துணை வட்டாட்சியர் அனுசியாவும் கலந்து கொண்டனர். இந்தப் பணிக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும் என்பதால், நேர்முகத் தேர்வுக்கு வந்த பெண் விண்ணப்பதாரர்கள் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வெளியே சைக்கிள் ஓட்டிக் காண்பித்தனர்.
அப்போது சிலர் சைக்கிள் ஓட்டத் தெரியாமல் தடுமாறினார்கள். இதுகுறித்து, அங்கிருந்த அரசு அதிகாரிகள் கூறும்போது, "பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்களில் கிராம உதவியாளர் பணிக்கு 9 இடங்கள் காலியாக உள்ளது. மேலும், ஆனைமலை வட்டத்தில் உள்ள தேவிபட்டணம், குப்புச்சிபுதூர், சுப்பையகவுண்டன்புதூர் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தனர்.