விஜய்யின் த.வெ.க. கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. மாநாட்டிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே கட்சிக் கொடியை அறிமுகப்படுத்திய போது அதற்கான விளக்கத்தை மாநாட்டில் சொல்வதாக தெரிவித்திருந்தார் விஜய். இதனால் மாநாட்டிற்கு தொண்டர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்தது. மேலும் கட்சிக் கொள்கையை மாநாட்டில் விஜய் அறிவிக்கவிருப்பதால் அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது. அதோடு மாநாட்டுத் திடலில் காமராஜர், பெரியார், அம்பேத்கர் மற்றும் விஜய்யின் கட்டவுட் வைக்கப்பட்டுள்ளது. இது பலரது கவனத்தை ஈர்த்தாலும் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது.
இதனிடையே த.வெ.க. மாநாட்டிற்கு வருவதற்குத் தமிழக முழுவதும் உள்ள தொண்டர்கள் தயாராகி வருகின்றனர்.மாலை 4 மணிக்கு மாநாடு தொடங்கவுள்ள நிலையில் அங்கு வைக்கப்படவுள்ள 100 அடி கொடி கம்பத்தில் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை ஏற்றுகிறார். அதன்பின் 6 மணிக்கு மேல் தொண்டர்கள் மத்தியில் நடிகர் விஜய் பேசவுள்ளார். அதில் கட்சியின் கொள்கை, கோட்பாடுகளையும் அறிவிக்கவுள்ளார்.
இந்த நிலையில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியும் இடம்பெற்றுள்ளது. மக்களவை தேர்தலுக்கு பின் புதியதாகப் பதிவு செய்த 39 கட்சிகளின் பட்டியலை இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதில் தமிழகத்தில் இருந்து த.வெ.க கட்சி மட்டும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் முகவரில் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.