கடந்த மூன்று முறை தொடர்ந்து விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர் விஜயதாரணி. இவர் பா.ஜ.க.வில் இணையப் போவதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. இது காங்கிரஸ் கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. முன்னதாக கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜயதாரணி வெற்றி பெற்றபோது, சட்டமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் பதவி கிடைக்கும் என எதிர்பார்த்துள்ளார். அந்த பதவியும் கிடைக்காமல் போன பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி கிடைக்கும் என நினைத்துள்ளார். ஆனால் சமீபத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவி செல்வப்பெருந்தகைக்கு வழங்கப்பட்டது.
அதே சமயம் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டும் கிடைக்காததால் விஜயதாரணி அதிருப்தியில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த சூழலில் அவர் டெல்லியில் முகாமிட்டிருந்த நிலையில், நேற்று (24.02.2024) பிற்பகல் 2 மணியளவில் சுதாகர் ரெட்டி, மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் விஜயதாரணி தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார்.
காங்கிரசில் தான் வகித்த அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக ராஜினாமா கடிதத்தையும் விஜயதாரணி வெளியிட்டு இருந்தார். அதே நரம் விஜயதாரணியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் மற்றும் அனைத்து பொறுப்புகளிலும் இருந்து நீக்கியதாக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜய் குமார் தெரிவித்திருந்தார். கட்சிதாவல் தடைச் சட்டத்திற்கு விஜயதாரணியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி பறிக்கப்படும் என காங்கிரஸ் கூறியிருந்தது. இந்தநிலையில் விஜயதாரணியே முன்வந்து அவருடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலோடு விளவங்கோட்டுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.