பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு
மகளிர் ஆயம் கண்டனம்!
மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா அறிக்கையில்,
விஜய் தொலைக்காட்சியில் “நீயா? நானா?” நிகழ்ச்சியில் “தமிழ்ப் பெண்கள் அழகா? கேரளப் பெண்கள் அழகா?” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளார்கள்.
தமிழகப் பெண்கள் இன்றைய அரசியல் சூழலில் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றனர். மதுக்கடை சீரழிவு, இந்திய அரசு - பன்னாட்டு நிறுவனங்களின் பொருளியல் அழிவுத் திட்டங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், உழைப்புச் சுரண்டல் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாடுகின்றனர். “நீட்” போன்ற கல்வி உரிமைப் பறிப்புத் திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி, கல்வியில் முன்னணியில் நிற்கும் தமிழ்நாட்டு மகளிருக்கு மிகப்பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், அண்மைக்காலமாக வெளி மாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் நிரப்பப்பட்டு, தமிழர்களின் வேலை வாய்ப்பும் பறிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுப் பெண் பட்டதாரிகளின் பொருளியல் தற்சார்பு பின்னோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாட்டுப் பெண்கள் இப்படிப் பல சிக்கல்களில் அவதியுறும் நிலையில், அதற்கெதிராக தன்னம்பிக்கையுடன் போராட வேண்டிய சூழலில், தேவைற்ற தலைப்புடன் – பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை காட்சிப் பொருளாகவே வைத்திருக்கும் நோக்குடனும் விஜய் தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருப்பது கண்டிக்கத்தக்கது!
இந்நிகழ்ச்சியில், கேரளப் பெண்களே அழகு என்று விவாதிப்பதன் மூலம் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவது, தமிழ் இனத்தை தாழ்வுபடுத்துவது நடக்கும். மாறாக, தமிழ்ப் பெண்களே அழகு என்று இன்னொரு தரப்பு பேசினால், மலையாளப் பெண்களை இனவகையில் இழிவு படுத்துவதாக அமையும். தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் தேவையற்ற ஒரு விவாதத்தின் மூலம் மோதலை ஏற்படுத்துவதும், இன வகையில் தாழ்வு மனப்பான்மையைத் திணிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
அழகு என்பது ஒவ்வொருவரின் தனித்த விருப்பம் சார்ந்தது. அதனை சில உடல் உறுப்பு அளவுகளிலும், நிறத்திலும் குறுக்கிச் சொல்வது இழிவானப் பண்பாகும்! மறுபுறம், அழகுணர்ச்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. அதனை பெண்களிடம் மட்டும் மையப்படுத்துவது பெண்களை உளவியல் வகையில் ஊனப்படுத்தும். தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்! பன்னாட்டு நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்படி அவர்களை மறைமுகமாக ஊக்குவித்து, அவர்களுக்கு இலாபம் ஏற்படுத்திக் கொடுக்கவே இது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகின்றன.
பெண்களின் மென்மையான உணர்வுகளைப் பாதிக்கும் சூட்சுமம் அறிந்து, அவர்களைப் சிக்கல்களிலிருந்து மடைமாற்றம் செய்ய விஜய் தொலைக்காட்சி நடத்தும் இந்நிகழ்ச்சியை “மகளிர் ஆயம்” வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்நிகழ்வை ஒளிபரப்பக் கூடாதெனக் கோருகிறது!
-இரா. பகத்சிங்