Skip to main content

திருச்சிக்கு வரும் புஸ்ஸி ஆனந்திற்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கண்டனம் 

Published on 21/08/2021 | Edited on 21/08/2021

 

Vijay People's Movement executives condemn Pussy Anand's visit to Trichy

 

திருச்சியில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், “நாங்கள் கடந்த பல ஆண்டுகளாக திருச்சி மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம், திருச்சி மாவட்ட தலைமை நிர்வாகிகளாகவும், ஒன்றிய, நகர, பகுதி, கிளை மன்ற நிர்வாகிகளாகவும் செயல்பட்டுவந்தோம். 14.06.2021 அன்று திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ஆர்.கே. ராஜாவை மாநில பொறுப்பாளராகிய புஸ்ஸி என்.ஆனந்த் இயக்கத்திலிருந்து நீக்கினார்.

 

அன்றிலிருந்து இன்றுவரை திருச்சி மாவட்ட முழுவதும் இருந்த நகர, ஒன்றிய, தலைமை நிர்வாகிகளையும் மாவட்டத்தில் உள்ள மக்கள் இயக்க நிர்வாகிகளையும் அன்று மாநில பொறுப்பாளராக இருந்த புஸ்ஸி ஆனந்த் புறக்கணித்தார். பின்னர் சில மாதங்களிலே திருச்சி மாவட்டம் 11 பிரிவாக பிரித்து பதவி வழங்கப்பட்டது. அதிலும் எங்களுக்கு எந்தவித அங்கீகாரமும் வழங்கப்படவில்லை. நாங்கள் குழுவாகவும், தனியாகவும் தலைமை இடத்திற்குத் தகவல் தெரிவிக்க முயன்றும் எந்தவித பயனும் இல்லை. எனவே தற்போது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் தளபதி விஜய் பெயரில் ரசிகனாகவும், கிளை இயக்க பதிவு எண் கொண்டும் மக்கள் நலப் பணி செய்யக் கூடாது என தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள்.

 

தொடர்ந்து நாங்கள் விஜயின் பெயரைப் பயன்படுத்தினால், மாநில பொறுப்பாளர் தூண்டுதலின் பேரில் காவல் நிலையத்தில் எங்கள் மீது புகார் கொடுத்து, விஜய் பெயரில் எந்த நலத்திட்டமும் செய்ய மாட்டேன் என எழுதிக் கொடுக்கும்படி நிர்பந்திக்கிறார்கள். இந்த அநியாயத்தை உலகறியச் செய்யும் பொருட்டு நாங்கள் பத்திரிகை நண்பர்களை நம்பியுள்ளோம்.

 

விஜய், தலைவர் (விஜய் மக்கள் இயக்கம்) அவரிடம் உண்மை நிலையை எடுத்துச் செல்லவும். எங்களுக்கு நடந்த இந்தத் துயர நிலையை எடுத்துரைக்கவும் மட்டுமே நாங்கள் ஒன்றுசேர்ந்து இந்தச் செய்தியாளர் சந்திப்பை நடத்துகிறோம்.

 

திருச்சியில் வரும் வாரம் விழா நடைபெறுகிறது என கேள்விப்பட்டோம் அதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விழாவிற்கு வரும் மாநில பொதுச் செயலாளர் என். புஸ்ஸி ஆனந்திற்கு எங்கள் எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்கிறோம். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பு முழுவதும் விஜய் அவர்களுக்கு, எங்களுக்கு ஏற்பட்ட அநீதியைத் தெரிவிக்கும் பொருட்டே நடைபெறுகிறது.

 

விஜய், திரையுலகில் காலடி எடுத்துவைத்தது முதல் அவரது ரசிகர்களாக இருந்து நற்பணி ஆற்றி வருபவர்களை விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து நீக்கிவிட்டு, கடந்த 5 - 6 வருடங்களில் உறுப்பினர்களாக சேர்ந்தவர்களுக்கு இன்று மாவட்ட அளவிலான பதவிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது விஜய்யின் வளர்ச்சிக்கா அல்லது வீழ்ச்சிக்கா? அவரது பிஸியான நேரத்தில் இது அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகிறதா என தெரியவில்லை. திருச்சியில் மட்டுமல்ல, அனைத்து மாவட்டங்களிலும் முக்கியமான சீனியர் நிர்வாகிகளை இயக்கத்தின் வளர்ச்சிக்காக உண்மையாக உழைப்பவர்களை நீக்கிவிட்டு, பதவி பணத்திற்காக உள்ளவர்களை முக்கிய பொறுப்பாளர்களாக நியமித்திருப்பது வேதனையானது” என தெரிவித்தனர். இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் தொட்டியம் ஒன்றியத் தலைவர் பாரதிராஜா, துறையூர் நகரத் தலைவர் சிவா, மண்ணச்சநல்லூர் ஒன்றியத் தலைவர் சுரேஷ், காஜாமலை பகுதி தலைவர் சுப்பிரமணியன், உறையூர் பகுதி சரண்ராஜ், நடராஜன், தொட்டியம் பகுதி ஹரிஹரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்