திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் தீபத்திருவிழாவை முன்னிட்டு நகரில் உள்ள ஹோட்டல்களில் அதிரடியாக ஆய்வு நடத்திவருகிறது திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை.
திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை அலுவலரான மருத்துவர் செந்தில்குமார் தலைமையிலான குழு, நவம்பர் 15ந்தேதி திருவண்ணாமலை – வேலுர் சாலையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு அருகில் உள்ள ஹோட்டல் விஜய் பார்க்குக்கு திடீரென ஆய்வுக்கு சென்றனர். சைவ-அசைவ விற்பனை உணவு விடுதியான அதில் உள்ள சமையலறையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தியபோது, 15 கிலோ சிக்கன் மற்றும் மட்டன் பிரிட்சரில் இருந்ததை பார்த்து அதை எடுத்து ஆய்வு செய்தபோது கெட்டுப்போன, வாங்கி சில நாட்களானவை அவை என்பதை அறிந்து அதிர்ச்சியாகினர்.
இதுப்பற்றி அதிகாரிகள் கேட்டபோது, அந்த ஹோட்டலில் இருந்தவர்கள் யாரும் சரியாக பதில்சொல்லவில்லை என்கின்றனர் அதிகாரிகள். அதே பிரிட்ஸர் பாக்ஸில் 50 பீர் பாட்டில்கள் இருந்துள்ளன. அனுமதி பெறாமல் ஹோட்டலில் சரக்கு விற்பனை செய்ததை கண்டு அதிர்ச்சியாகினர். அதனையும் பறிமுதல் செய்தனர்.
இப்படி அனுமதி பெறாமல் சரக்கு விற்பனை செய்வது கடந்த சில வாரங்களாக நடந்துள்ளது. இதுப்பற்றி திருவண்ணாமலை நகர போலிஸாருக்கு தெரிந்தும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் தீபத்திருவிழாவை முன்னிட்டு நகரில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டது. ஆனாலும் அனுமதி பெறாத இந்த ஹோட்டலில் இல்லீகலாக மது விற்பனை செய்யப்பட்டது. காவல்துறைக்கு மாமூல் செல்வதால் தான் கண்டுக்கொள்ளவில்லை என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
அதோடு, இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ள இடத்தோடு சேர்ந்து நீர் பொறம்போக்கு இடத்தையும் ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ளது என்கிற குற்றச்சாட்டும் உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இந்த ஹோட்டல் அதிமுக பிரமுகரான விஜய் என்பவருக்கு சொந்தமானது என்பதும் குறிப்பிடதக்கது.