நெல்லையில் பொருட்காட்சித் திடல் அருகே எஸ்.என். ஹைரோடு பகுதியில் உள்ள டவுன் சாஃப்டர் தனியார் மேல்நிலைப் பள்ளியில், நேற்று (17.12.2021) மாணவர்கள் பயன்படுத்தும் கழிப்பறை சுவர் இடிந்துவிழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் விவரங்களைப் பள்ளி நிர்வாகம் வெளியிட்டது. சுதீஸ் - 6ஆம் வகுப்பு 'சி' பிரிவு, விஷ்வரஞ்சன் - 8ஆம் வகுப்பு 'ஏ' பிரிவு, அன்பழகன் - 9ஆம் வகுப்பு 'பி' பிரிவு என மூன்று மாணவர்கள் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நிவாரணமும் அறிவித்துள்ளார். “இந்த துயர சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனையுற்றேன். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கல்” என தெரிவித்துள்ளார். மேலும், இந்த விபத்தில் உயிரிழந்த 3 மாணவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், காயமடைந்த 4 மாணவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரணமும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விபத்தில் மாணவர்களை மீட்பதில் ஆசிரியர்கள் மெத்தனம் காட்டியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சம்பவம் நடைபெற்றபோது அங்கு ஆசிரியர்கள் மாணவர்களை மீட்டு தங்களது காரில் ஏற்றிச்செல்ல மறுத்ததாகவும், ஆன்புலன்ஸ் வரும்வரை காத்திருந்ததாகவும் அப்பள்ளி மாணவன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் தனது உறவினர்களிடம் நடந்த விபத்து குறித்து விவரிக்கும் மாணவன், ''சுற்றியிருக்கும் எல்லா சார்கிட்டையும் கார் இருக்கு. கொண்டு போயிருந்தா காப்பாத்தியிருக்கலாம். ஆம்புலன்ஸ் வரட்டும்... ஆம்புலன்ஸ் வரட்டும்... என அப்படியே நிப்பாட்டி அப்படியே போயிருச்சு... என்னைச் சுத்தி 20 சார் நிக்குறாங்க.. 20 சார்கிட்டயும் 20 கார் இருக்கு... ஹெச்.எம் கிட்ட கார் இருக்கு, ஏ.ஹெச்.எம் கிட்ட கார் இருக்கு... ஒன்னுக்கு 5 கார் இருந்தும் காப்பாத்தல'' எனப் பேசியுள்ளார்.
அதேபோல் கழிப்பறை கட்டடம் குறித்து புகார் கொடுத்தும் பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் இருந்ததாகக் கூறி மாணவர்கள், ''ஹெச்.எம். ஒழிக'' என கோஷங்களை எழுப்பியபடி சாலையில் சென்றனர்.