இந்திய நாடு முழுவதும், இந்தி மொழி நாளாக செப்டம்பர் 14-ஐ பாஜக தரப்பு கொண்டாடிவந்த நிலையில், அதே நாளில் திமுக முப்பெரும் விழாவைத் தொடங்கிவைத்தார் நாடாளுமன்ற உறுப்பினரான கனிமொழி.
ஆண்டுதோறும் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரின் பிறந்தநாளோடு, திமுக தொடங்கிய நாளையும் இணைத்து செப்டம்பர் 15, 16, 17 ஆகிய நாட்களில் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டுவருகிறது. அந்த வகையில் இவ்வருடம் திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, நேற்று (14.09.2021) தனது சமூகவலைதளப் பக்கத்தில் ‘திராவிடம் ஒரு வாழ்க்கை முறை’ என்ற காணொளியை வெளியிட்டு முப்பெரும் விழாவைத் தொடங்கி வைத்திருக்கிறார்.
அதேபோல், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று (15.09.2021) கனிமொழி மீண்டும் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், அண்ணாவின் மாநில சுயாட்சி, எதிர்கால திட்டமிடல் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டுள்ளது.