Skip to main content

தண்ணீரில் பலியாகும் உயிர்கள்! கற்றுக் கொள்ள வேண்டாமா நீச்சல்?- ஒரு கிராமம் புகட்டும் பாடம்!

Published on 27/09/2017 | Edited on 27/09/2017
தண்ணீரில் பலியாகும் உயிர்கள்! கற்றுக் கொள்ள வேண்டாமா நீச்சல்?- ஒரு கிராமம் புகட்டும் பாடம்!

பள்ளி விடுமுறை நாட்கள் வந்துவிட்டால், மாணவர்களும் பெற்றோரும் கவனமுடன் இருக்க வேண்டும். இல்லையென்றால், ஏதாவது ஒரு விதத்தில் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும். அப்படி ஒரு சம்பவம்தான் விருதுநகர் மாவட்டம் – சாத்தூர் – வெம்பக்கோட்டை – அக்கரைப்பட்டி என்ற கிராமத்தில் நடந்திருக்கிறது.



பள்ளி மாணவர்களான பார்த்தசாரதிக்கு வயது 12 ஆகிறது. அவனது அண்ணன் பொன்னழகுவுக்கு வயது 15. இவர்களது தந்தை பொன் இருளப்பனுக்கு உடல் நலமில்லை. அதனால், தன் மனைவி மாதம்மாளோடு மருத்துவமனை சென்றுவிட்டார்.  ‘விட்டாச்சு லீவு’ என்ற குஷியோடு, பார்த்தசாரதியும், பொன்னழகுவும் பக்கத்தில் உள்ள வைப்பாற்றுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். இருவருக்குமே நீச்சல் தெரியாது. இந்த நிலையில், எதிர்பாராதவிதமாக, ஆற்றில் ஆழம் அதிகமாக இருந்த ஒரு குழிக்குள் பார்த்தசாரதி மூழ்கிவிட்டான். தம்பியைக் காப்பாற்ற முயற்சித்தான் பொன்னழகு. ஆனால், இருவருமே ஆற்றுத் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்டனர்.

ஒரே குடும்பத்தில் இருவர் இறந்துவிட்டதால் அக்கரைப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கிவிட்டது. அந்த ஊர் மக்கள் “வைப்பாற்றில் மணல் அள்ளுகின்றனர். அதனால் பல இடங்களில் ஆழ்விழுங்கி பள்ளங்களை ஏற்படுத்திவிடுகிறார்கள். மழை நேரத்தில் ஆற்றில் நீர்வரத்து இருக்கும். அப்போது, அந்தப் பள்ளங்களும் தண்ணீரால் நிரம்பிவிடும். மேலோட்டமாகப் பார்க்கும் போது ஒன்றும் தெரியாது.   சிறுவர்கள் ஆழம் தெரியாமல் விழுந்து விடுகிறார்கள். இதையெல்லாம் கவனித்து மக்களைக் காப்பாற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதில்லை.” என்கிறார்கள் ஆதங்கத்துடன். 



இத்தனை சோகத்திலும், “நீச்சல் பயிற்சி குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு இல்லையே?” என்று நம்மிடம் கவலையை வெளிப்படுத்திய அந்த ஏரியாவைச் சேர்ந்த சமூக ஆர்வலரான விஜயகுமார், “தண்ணீரால் ஆபத்து என்பது உலகம் முழுவதும் நடக்கிறது. நீச்சல் தெரியாமல் ஆற்றிலும், குளத்திலும், கடலிலும் மூழ்கி இறந்தவர்கள் அனேகம் பேர். எது எதையோ கற்றுக்கொள்கிறார்கள். செல்போனுக்குள் புகுந்து விளையாடுகிறார்கள். நீச்சலின் முக்கியத்துவத்தை அவர்கள் உணர்வதில்லை. பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதில்லை.

5 வயதிலிருந்தே ஒரு குழந்தைக்கு நீச்சல் கற்றுத்தர முற்பட வேண்டும். பதினெட்டு வயது நிரம்பும்போது, நீச்சல் என்பது அத்துபடியாக இருக்க வேண்டும். பத்து வயதுக்குள் ஒருவர் நீச்சல் கற்றுக்கொண்டால், தனக்கென்று ஒரு நிரந்தரச் சொத்தை சேர்த்து வைத்துவிட்டார் எனலாம். நீச்சல் அடிப்பதால், மன அழுத்தம் குறையும். உடல் தசைகள் நல்ல வலுவுடன் இருக்கும். ஆரோக்கியத்துக்கு ஒரு குறைவும் ஏற்படாது. எந்த ஒரு செயலிலும் உற்சாகமாக ஈடுபட முடியும். குறிப்பாக, முதுகுவலி, கழுத்துவலி, முழங்கால் மூட்டுவலி என்பதெல்லாம் வரவே வராது.

எந்த ஒரு சம்பவத்திலிருந்தும் பாடம் படித்துக்கொள்ள வேண்டும். சைக்கிள் பழகுவது போல, பைக் மற்றும் கார் ஓட்டுவது போல, தண்ணீரில் நீச்சல் அடிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். இந்த கிராமத்தில், நீச்சல் தெரியாததால் 2 உயிர்கள் பறிபோய்விட்டன. அக்கரைப்பட்டி கிராமத்தினருக்கு மட்டுமல்ல. எல்லா மக்களுக்குமே நீச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்.” என்றார் பொறுப்புணர்வுடன். நீச்சல்பயிற்சியின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும். பள்ளிகளிலேயே அதனை வலியுறுத்த வேண்டும்!

- சி.என்.இராமகிருஷ்ணன்

சார்ந்த செய்திகள்