நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலையொட்டி, அ.தி.மு.க.வின் முன்னாள் செய்தித் தொடர்பாளர் புகழேந்தி, ஓசூரில் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த புகழேந்தி, "ஜனநாயக கடமையை ஆற்றியதில் மிக்க மகிழ்ச்சி. யாருக்கு வாக்களித்தோம் என்று சொல்லக் கூடாது. எனது வாக்குகளைப் பொறுத்தவரை அது மதவாத சக்திகளுக்கு எதிராக அமைந்திருக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டிவிட்டேன். ஒரு நல்லாட்சிக்கு உட்பட்டது தான், நகர்ப்புற உள்ளாட்சி என்பது எல்லோரும் அறிந்தது. சாதாரண மக்கள் கூட புரிந்து கொள்ள முடியும். ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று சொன்னார்கள். நான் சொன்னேன், ஆம், ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே ஜெயில். கொள்ளையடித்தவர்களும், சுரண்டியவர்களும், மக்கள் எதிராக நடந்து கொண்டவர்களும் ஒரே சிறைக்குப் போகச் சட்டத்தில் வாய்ப்பிருக்கிறது. ஆனால் ஒரே தேர்தலுக்கு வாய்ப்பில்லை. ஒரே தேர்தல் என்று சொல்லுவது ஏமாற்றுகின்ற வேலை.
தற்போது ஐந்து மாநிலங்களுக்குச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மீண்டும் அனைத்து மாநிலங்களுக்கும் எப்படித் தேர்தல் நடைபெறும்? ஓசூரில் டி.வி.எஸ்., கேட்டர்பில்லர், அசோக் லைலாண்ட் போன்ற நிறுவனங்கள் மக்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. மற்றபடி, எனக்கு தெரிந்த வரை இங்கு பெரிய வளர்ச்சி ஏதுமில்லை.
அமையவிருக்கின்ற நகராட்சியிலாவது ஓசூர் மக்களுக்குத் தேவையான வசதிகளையெல்லாம் செய்து தருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. நாம் பொறுத்திருந்து அதைப் பார்க்கலாம். என்னைப் பொறுத்த வரை, இந்த தேர்தல் ஆளுங்கட்சிக்குத் தான் சாதகமாக இருக்கும். இந்தியாவைப் பொறுத்த வரை இரண்டு கட்சிகள் பா.ஜ.க., காங்கிரஸ். நீங்கள் எதை உருவாக்க முயற்சித்தாலும், அது அவர்களுக்கு துணையாகத் தான் போய் நிற்கும். நாம் மத்தியிலேயே தலைமையேற்று எதையும் நடத்த முடியாது. ஆகவே, மத்தியிலேயே ஜனநாயகப் பூர்வமாக, மதவாத சக்திகளை எதிர்த்து நிற்கின்ற, அந்த அணிக்குத் தோளோடு, தோள் நிற்க முடியும்.
ஜெயலலிதா மோடியா, லேடியா என்று கேட்ட போது, முழுவதுமாக அ.தி.மு.க.விற்கு வாக்களித்துப் பார்த்தார்கள். எப்படியாவது, தென்னிந்தியாவின் தமிழகத்திலிருந்து ஒரு பிரதமர் வர வேண்டும் என்று மக்கள் நல்ல நியாயமான தீர்ப்பை அளித்துக் கூட பார்த்தார்கள், அப்போது கூட அதை நாம் செய்ய முடியவில்லை. பல நேரங்களில் தமிழர்களுக்கு வாய்ப்பு கிடைத்தும், அது பலனளிக்காமல் போகின்ற சூழ்நிலையைத் தான் பார்க்கிறோம்.
தமிழக அரசு குறைகளைச் சொல்லுகின்ற அளவிற்கு இல்லை என்று சொன்னாலும், பல நடவடிக்கைகளைத் தாமதமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை இல்லை. சமூக நீதியை யார் முன்னெடுத்தாலும் நான் வரவேற்கிறேன். ஜெயலலிதாவின் வழியில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும், பா.ஜ.க.வைப் புறக்கணித்துச் சென்றால், நாடு நலம் பெறும்; மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பது தான் எனது கருத்து. ஆகவே, அவர்கள் விடாததை நான் தொடுவதாக இல்லை. பா.ஜ.க. ஆட்சியைத் தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
கர்நாடகாவில் நிலவும் தற்போதைய நிலையைப் பார்த்திருப்பீர்கள்; முகத்தை மூட வேண்டாம் என்கின்ற தோற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் அரசியல் ஆதாயத்தைத் தேடுகிறார்கள். இதைப் போடு, அதைப் போடு என்று மாணவர்களுக்குச் சொல்வதை முதலில் நிறுத்திக் கொள்ள வேண்டும். முகலாயர்கள் ஆண்ட காலத்திலிருந்து இந்தியத் திருநாட்டைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே முகத்தை மூடி இஸ்லாமியர்கள் அழகு பார்த்தார்கள். தொழுகைக்குச் செல்ல, கை மற்றும் கால்களைக் கழுவி முகத்தை மூடிவிட்டுச் செல்வார்கள். இதுதான் அவர்கள் வந்திருக்கின்ற வழி.
கரோனா காலத்தில் முகக்கவசத்தை அணியும்படி சொல்லுகிறோம்; கிறிஸ்தவர்கள் இல்லாமல் இங்கு கல்வி இல்லை. இஸ்லாமியர்கள் இல்லாமல் எதுவும் நடக்காது." இவ்வாறு புகழேந்தி தெரிவித்துள்ளார்.