தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்களின் தீர்ப்பு குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’18அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியளிக்கிறது. சட்டரீதியாக இந்தத் தீர்ப்பு எதிர்க்கப்பட வேண்டும். அதே நேரத்தில் இந்த 18 தொகுதிகளுக்கும் ஏற்கனவே காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கும் சேர்த்து உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக வலியுறுத்துகிறோம்.
18 எம்எல்ஏ-க்கள் வழக்கில் கடந்த ஜூன் மாதம் இரண்டு நீதிபதிகள் அமர்வு முரண்பட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டதால் மூன்றாவது நீதிபதியிடம் இந்த வழக்கு ஒப்படைக்கப்பட்டது. முந்தைய தீர்ப்பில் நீதிபதி சுந்தர் சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்து கூறியிருந்த காரணங்கள் வலுவானவையாக இருந்தன.
சபாநாயகரின் முடிவு சட்டத்துக்கு உகந்ததாக இருக்கிறதா?, உள்நோக்கம் கொண்டதாக இருக்கிறதா?, இயற்கை நீதிக்கு ஏற்றதாக இருக்கிறதா? என்ற கேள்விகளை எழுப்பி 18 எம்எல்ஏக்களும் ஆளுநரை சந்தித்து மனுகொடுத்த போது அதிமுகவின் இரண்டு அணிகளில் எந்த அணி சட்டப்பூர்வமானது என்பது தீர்மானிக்கப்படாமல் இருந்தது. எனவே, அவர்கள் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டார்கள் எனக் கூற முடியாது என்று நீதிபதி சுந்தர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி 18 எம்எல்ஏ-க்களுடன் ஆளுநரை சந்தித்த இன்னொரு எம்எல்ஏவான ஜக்கையன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அது சபாநாயகர் பாரபட்சமாகவும் இயற்கை நீதிக்கு எதிராகவும் நடந்துகொண்டதைத் தெளிவுப்படுத்துகிறது. எனவே, 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று நீதிபதி சுந்தர் குறிப்பிட்டிருந்தார். மூன்றாவது நீதிபதி அந்த நிலைப்பாட்டை உறுதி செய்வார் என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் நேரெதிரான முடிவை எடுத்துள்ளார். நீதியின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரையும் இது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதற்கு சட்டரீதியில் தீர்வு காணப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் கடந்த ஓராண்டுக்கும் மேலாக அந்தத் தொகுதிகள் பிரதிநிதி இல்லாமல் உள்ளன. எனவே, இனிமேலும் தாமதிக்காமல் அந்தத் தொகுதிகளில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
ஏற்கனவே காலியாக உள்ள இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்தாமல் தமிழக அரசு இழுத்தடித்து வருகிறது. அதைப்போலவே இந்தத் தொகுதிகளிலும் தேர்தல் நடத்தாமல் இருக்க ஆளுங்கட்சி முயற்சிக்கக்கூடும். ஆனால், அதற்கு தேர்தல் ஆணையம் துணை போகக் கூடாது தற்போது நடக்கவுள்ள ஐந்து மாநிலத் தேர்தல்களோடு இந்த இடைத்தேர்தல்களையும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.
’’