மழைக்காக மலை உச்சியில் சப்த கன்னி பூஜை
கடந்த வருடம் வரை வறட்சியிலும் வற்றாத அருவியாய் ஒடிப் பாய்ந்த நெல்லை மாவட்டத்தின் உயிர் நதியான தாமிரபரணியின் அருட்கொடையால் 70 அடிக்கும் மேலாக மேற்குத் தொடர்ச்சி மலையிலுள்ள மணிமுத்தாறு பாபனாசம் சேர்வலாறு ஆகிய ஆணைகளிலிருந்த நீர் மட்டம் தற்போதைய கடும் வறட்சி காரணமாக 30 அடி லெவலுக்கு வந்து விட்டன. அதிலும் பாதி அகளிகளைக் கொண்ட சகதி.
அரசின் 27 கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலமாக நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் என்று நான்கு மாவட்ட மக்களின் குடி தண்ணீருக்கு ஆணி வேராக இருந்து வருவது. அது மட்டுமல்லாமல் ஒருங்கிணைந்த நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட மக்களின், பிறப்பு முதல் ஈமக்கிரியை வரை மனித வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை தேவைகளையும் பூர்த்தி செய்வது தாமிரபரணி.
யார் வைத்த சூன்யமோ விளங்கவில்லை. கடந்த வருட தென்மேற்குப் பருவமழையும், தொடர் நன்கொடையான வடகிழக்குப் பருவமழையும் கூட்டாகப் பேசி வைத்தாற் போன்று தரையை மட்டும் நனைத்துவிட்டுப் போக, தாமிரபரணியாறு வறண்டு சுருங்கியது. மழையின்றி அணைகள் வறண்டன பூமிகள் காய்ந்து கருகிய அளவிற்குப் போய்விட்டது. விளைவு, நம்பியிருந்த நான்கு மாவட்ட மக்களும் குடி தண்ணீருக்காக அலைமோதும் சூழல் ஏற்பட்டு விட்டது.
இந்த நிலையில் மூதாதையர்களின் வழக்கப்படி, இயற்கையை வசப்படுத்தவும் அண்டசராட்சரங்களை சாந்தப்படுத்தவும், மழை பொழிவிக்கிற மணிமுத்தாறு மேலுள்ள பகுதியின் சப்த கன்னியருக்கான அருவித்தலை பூஜையை நடந்த மணிமுத்தாறு பகுதிலுள்ள, சிங்கம்பட்டி ஜமீனைச் சேர்ந்த அயன் சிங்கம்பட்டி பாப்பன்குளம், சிங்கம்பட்டிப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இந்த பூஜைக்காக அந்தக் கிராம மக்கள் பெரும் சிரமத்தை ஏற்றுக் கொண்டது புருவங்களை முடிச்சிவைக்கும். அந்த பூஜையை அர்ச்சகர்களின் துணையோடு வியக்க வைக்கும் வகையில் நடத்தியிருப்பது கவனிக்கத்தக்கவை.
இந்தக் கிராமத்தைச் சேர்ந்த இருநூறுக்கும் மேற்பட்ட மக்கள் வனத்துறையின் அனுமதியுடன் பூஜைக்கு தேவையான 20 அர்ச்சகர்களோடு, பூஜைப் பொருட்களையும் சுமந்தார்கள். மலை மீதுள்ள அடர்ந்த காடுகள் வனப்பகுதியையும், கடந்தவர்கள் மணிமுத்தாறு மலையருவியைக் கடந்து மாஞ்சோலை காவல் சரகப் பகுதியிலுள்ள தலையணைப் பகுதியின் வழியாக அடர்ந்த வனக்காட்டுப் பகுதியில் மலைப் பயணமாக நடந்தவர்கள், எதிர்ப்பட்ட மணிமுத்தாறை மூன்று இடங்களில் கடந்து பின்பு, சுரைக்காய் ஒடை, கீழ்க்கண்டம் பாறை, மேல்கண்டம் பாறை வழியாக நடந்தவர்கள்,அடர்ந்த புதர் செடிகளை வெட்டித் தள்ளி வழியேற்படுத்திக் கொண்டும், வனத்துறையினர் ஏற்படுத்திக் கொடுத்த பாதை வழியாக 4 மணி நேரத்திற்கும் மேலான நடைப் பயணத்திற்குப் பிறகே கடல் மட்டத்திலிருந்து சுமார் 2500 அடி உயரமுள்ள தலையருவியை அடைந்தார்கள்.
அங்கே சுமார் 500 அடி உயரத்திற்கு மேலான அளவுடைய மலை மீதிருந்து, விண்ணிலிருந்து வெள்ளியை உருக்கி விட்டாற் போன்று கொட்டுகிற தலையருவி. அதன் அருகில் பல நூறு அடி ஆழத்தைக் கொண்ட தடாகப் பகுதி ஆபத்தைக் கொண்டது. ஆபத்தான இந்த அருவியின் கீழேயுள்ள பாறைகளில் தான் சப்தகன்னிகளை வரவழைக்கிற, கந்தர்வ வழிபாடு நடத்தப்படுகிறதாம். ஆனந்தபட்டர் தலைமையிலான 20 அர்ச்சர்களும், தாமரைமலர் கொண்டு சப்தகன்னியர்களை வடிவமைத்து 7 விதமான வண்ணத் துணிகளால் அபிஷேக ஆராதனை, சிறப்பாக ஹோமங்களைச் செய்தனர். இதையடுத்து சப்தகன்னியர்களை வரவழைக்கிற வினோதமான கந்தர்வ வழிபாடு நடத்தப்பட்டது. இதற்காகப் பக்தர்கள் கொண்டு வந்து ஆட்டைப் பலியிட்டு அதன் தலையை அறுத்து அதன் ரத்தத்தை ஒரு பாத்திரத்தில் பிடித்து அந்தப் பகுதி பாறையின் முழுவதும் தெளித்தனர்.
அதன் பின் ராட்ச முத்துப்பாண்டியன் என்பவர் துண்டிக்கப்பட்ட ஆட்டின் தலையை ஒரு தட்டில் வைத்து பூ மற்றும் பூஜைப் பொருட்களால் அலங்கரித்து பூஜை செய்து அருவியின் தடாகத்தில் விட்டார். இந்தப் பூஜை முன்னோர்களின் வழக்கப்படியும், மரபுப்படியும் நடத்தப்படுகிறன இந்த பூஜை நடத்தப்பட்ட அன்று இரவு தான் மழை ஆரம்பிக்கும். ஆனால் இந்த ஆண்டு பூஜை நடக்கும் போதே மழை பெய்யத் துவங்கியது நல்ல சகுனம் என மகிழ்ச்சியைத் தெரிவித்தனர் சிங்கம்பட்டி கிராம மக்கள், அதையடுத்து அங்குள்ளவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, பின்பு பலியிடப்பட்ட ஆட்டிறைச்சி படையலிடப்பட்டு அதிகாலை விருந்து வைக்கப்பட்டது.
காலையில் தரையிறங்கியவர்கள் மணிமுத்தாறு அருவி அருகில் உள்ள வனப்பேச்சியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை செய்து விட்டு வழிப்பாட்டையும், பயணத்தையும் முடித்தனர். மலை உச்சியின் அருவித் தலைப் பூஜையான சப்தகன்னியர்களுக்குரிய பூஜையை சிறப்பாகச் செய்ததன் மூலம் இந்த ஆண்டு அந்தக் கந்தர்வக்கன்னியரின் கடாட்சத்தால் சிறப்பாக மழைபொழியும் என்பது இந்தக் கிராம மக்களின் நம்பிக்கை. அது வீண்போகாது என்கிறார்கள் நம்பிக்கைதானே வாழ்க்கையின் திறவுகோல்.
-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்