Skip to main content

நதிநீர் தாவா  சட்டத்திற்கு எதிராக  கர்நாடகாவிற்கு அனுமதி - அநீதியை எதிர்த்து வழக்கு தொடர வேல்முருகன் வலியுறுத்தல்

Published on 28/11/2018 | Edited on 28/11/2018
ve

 

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி தொடர்பாக  தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை: 

’’தமிழ்நாடு, கர்நாடகம், புதுச்சேரி, கேரளம் ஆகிய காவிரி உரிமை மாநிலங்களுக்கிடையே நதிநீர் பங்கீட்டுப் பிரச்சனை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தன்னிச்சையாக, சர்வாதிகாரப் போக்கில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வினை நடத்த கர்நாடகத்திற்கு அனுமதி அளித்திருக்கிறது ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம்.

 

கடைமடைப் பாசன மாநிலங்களின் ஒப்புதல் இல்லாமல் காவிரியில் புதிய அணை உட்பட எந்தப் பணிகளையும் செய்ய முடியாது என்பது காவிரி நடுவர் மன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளில் தெளிவாகக் காட்டப்பட்டிருக்கிறது.

 

முன்பு சிவசமுத்திரம் நீர்மின் திட்டத்திற்கான வரைவு அறிக்கையை கர்நாடகம் அனுப்பியபோது அதில் தமிழகத்தின் அனுமதிக் கடிதம் இணைக்கப்படாததால் அதனைத் திருப்பி அனுப்பியது ஒன்றிய அரசு. இந்த நிலைபாட்டை எடுத்தவர் உமாபாரதி. ஆனால் அதே பாஜகவைச் சேர்ந்த அமைச்சரான நிதின் கட்கரி தமிழக அரசின் அனுமதிக் கடிதம் இல்லாமலே மேகதாது அணைக்கு ஒப்புதல் அளித்திருக்கிறார். இது அநீதி மட்டுமல்ல; மாபெரும் சதியும்கூட என்று குற்றம்சாட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

 

மேகதாது அணை தொடர்பான பேச்சு திடீரென்று ஏற்பட்டதல்ல; சில ஆண்டுகளாகவே இந்தப் பேச்சு அடிபட்டுவந்திருக்கிறது; இதற்காக ஒன்றிய அமைச்சர்களுடனான கர்நாடக அமைச்சர்களின் சந்திப்புகளும் பல நடந்திருக்கின்றன. இதையெல்லாம் கவனிக்காமலே இருந்ததா தமிழக அரசு என்று கேட்க வேண்டியதிருக்கிறது. இதனை உன்னிப்பாகக் கவனித்திருந்தால் தமிழக அரசு சார்பில் ஒன்றிய அரசை பகிரங்கமாகவே எச்சரிக்கை செய்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடைபெறாததும் ஒன்றிய அரசு தன்னிச்சையாகவும் சர்வாதிகாரமாகவும் கநாடகத்துக்குச் சாதகமாக நடந்துகொண்டதற்கு ஒரு காரணம் என்று தோன்றுகிறது.

 

ஏற்கனவே கர்நாடகாவில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பல அணைகளும் டெல்லியின் சட்டவிரோத சர்வாதிகார அனுசரணையுடன்தான் கட்டப்பட்டவை. அந்த வகையில்தான் இப்போதும் மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.

 

கன மழை இல்லாக் காலங்களில் கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடுவதில்லை. அப்போதும் கர்நாடக அணைகளின் இருப்பு அவற்றின் கொள்ளளவான 104.59 டிஎம்சிக்கு குறைவாக இருந்ததில்லை. மேகதாது அணை கட்டப்பட்டதென்றால் அதன் கொள்ளளவான 67.14 டிஎம்சியும் சேர்ந்து கர்நாடக அணைகளின் மொத்த கொள்ளளவு 171.73 டிஎம்சியாக உயர்ந்துவிடும். நல்ல நாளிலேயே நமக்கு தண்ணீர் வராதபோது அப்போது எப்படி தண்ணீர் கிடைக்கும்?

 

அதனால் தமிழகத்தின் காவிரி பாசன மாவட்டங்கள் மேலும் வறட்சியைத்தான் சந்திக்கும். முப்போகம் என்பது போய் குறைந்த பரப்பளவே சாகுபடியாகும் சம்பாவும் அப்போது காணாமல் போய்விடும்.

 

ஆக, மேகதாது அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்விற்கான அனுமதி என்பது சதியும் சூழ்ச்சியும் கலந்ததாகும். காவிரி உரிமை மாநிலங்களின் ஒப்புதலின்றி அளிக்கப்பட்டுள்ள இந்த அனுமதி நடுவர் மன்ற, உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு மட்டுமின்றி, மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் தாவா சட்டம் மற்றும் பன்னாட்டு நதிநீர் சட்டத்திற்கும் எதிரானதாகும்!

 

இதனால் தமிழகத்திற்கு மேலும் அநீதியை இழைத்துள்ளது ஒன்றிய அரசு; சட்டவிரோத இந்த அனுமதியை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்பதுடன், இதனை எதிர்த்து உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும் என வலியுறுத்துகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! ’’


 

 

சார்ந்த செய்திகள்