Skip to main content

உபகரணங்களைப் பயன்படுத்தத் தெரியாத காவலர்கள்; டிஐஜி ஆய்வில் பரபரப்பு

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
vellore police who did not know how to use the excuses

வேலூர் மாவட்ட காவல்துறையின் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள துப்பாக்கி, லத்தி, சீருடைகள், முதலுதவி சிகிச்சை பெட்டி, உடைமைகள் மற்றும் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீப்கள், கார்கள், ரோந்து பைக், மொபட் வாகனங்கள் ஆண்டுக்கு ஒருமுறை ஆய்வு செய்யப்படும். அதன்படி இந்தாண்டிற்கான வருடாந்திர ஆய்வு வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் நடந்தது.

ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் அனைத்து காவலர்களும் தங்களது உடைமைகளுடன் அணிவகுத்து வந்து நின்றனர். அப்போது, ஒவ்வொரு காவலரின் சீருடை, லத்தி, போர்வை, முதலுதவி சிகிச்சை பெட்டி குறித்து டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்தார். அப்போது, முறையாக உடைமைகள் பயன்படுத்தப்படுகிறதா? இல்லை இன்றுதான் புதிதாக வாங்கி வைத்துள்ளீர்களா? என்று கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த காவலர்கள், நாங்கள் முறையாகத்தான் பயன்படுத்தி வருகிறோம் என்று பதில் அளித்தனர்.

அப்போது, வாகனங்களில் பயன்படுத்தப்படும் முதலுதவி சிகிச்சை பெட்டியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரியுமா? என்று போலீசாரிடம் கேட்டார். மேலும் அங்கிருந்த காவலரிடம் அதை எப்படி பயன்படுத்துவது என்று கேள்வி எழுப்பினார். சில காவலர்கள் அதைப் பயன்படுத்த தெரியாமல் திணறினர். 

பைக்கில் உள்ள மைக்கை பயன்படுத்துவது குறித்து ஒரு காவலரிடம் கேட்டார். அவருக்கும் பைக்கில் உள்ள மைக்கை பயன்படுத்தி பேசத் தெரியாமல் திகைத்து நின்றார். இதை கற்றுக்கொண்டுதான் நீங்கள் ரோந்து வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். அடுத்தடுத்து காவலர்களிடம் டிஐஜி கேள்வி மேல் கேள்வி கேட்டதால் மற்ற காவலர்களிடம் பரபரப்பு பற்றிக் கொண்டது. அடுத்து நம்மிடம் என்ன கேள்வி எழுப்ப உள்ளார் என்று தெரியாமல் போலீசார் திகைத்தனர்.

தொடர்ந்து வாகனங்கள் முறையாக பராமரிக்கப்பட்டுள்ளதா? குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் பழுது பார்க்கப்பட்டுள்ளதா? டிரைவர்களுக்கு அடிப்படை வாகன பழுது பார்த்தல் குறித்து தெரிந்து வைத்துள்ளனரா? என்று ஆய்வு செய்தார். மேலும் வாகனங்களில் முதலுதவி பெட்டி வைக்கப்பட்டுள்ளதா? ஓட்டுநர் உரிமம் வைத்துள்ளனரா? என்று ஆய்வு செய்தார்.

வாகனங்களை இயக்கும்போது அனைவரும் தங்களுடைய ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். காலாவதியான உரிமத்தை புதுப்பிக்க வேண்டும். வாகனங்களில் உள்ள தளவாட பொருட்களில் குறைபாடுகள் இருந்தால் நிவர்த்தி செய்ய வேண்டும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் வாகனங்களை இயக்கினால் கண் பரிசோதனை செய்திருக்க வேண்டும். கலவரம் மற்றும் கூட்டத்தை கட்டுப்படுத்துதல் குறித்த அடிப்படை பயிற்சிகளை அனைவரும் கற்றுக்கொண்டிருக்க வேண்டும்.

அனைவரும் துப்பாக்கிச் சுடும் பயிற்சி முடித்திருக்க வேண்டும். வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை சரியாகப் பயன்படுத்த வேண்டும். 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை செய்ய வேண்டும். வாகனங்களை முறையாக பராமரிக்க வேண்டும். ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்ட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

சார்ந்த செய்திகள்