தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகளை தொடங்கி வைக்க வேலூர் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், நேற்று பிப்ரவரி 1 ஆம் தேதி, வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பேராசிரியர் அன்பழகன் நினைவு பள்ளி மேம்பாடு திட்டம் தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி மற்றும் தொழிற்கல்வி பாடங்களில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மனுவை வேலூர் மாவட்ட நிர்வாகிகள் பிரான்சிஸ் சேவியர் ராஜ், வேளாங்கண்ணி, பாலமுருகன் ஆகியோர் முதல்வரிடம் கொடுத்தனர்.
இது குறித்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியது, "11 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணிபுரியும் 12 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்களை முதலமைச்சர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என இந்த கள ஆய்வில் முதலமைச்சர் திட்டம் நிகழ்ச்சியிலும் மனு கொடுத்துள்ளோம். தொகுதிப்பூதிய ஆசிரியர்களாக பணியாற்றும் பலர் 50 வயதைக் கடந்து விட்டார்கள். இன்னும் சில ஆண்டுகள் தான் பணிபுரிய முடியும். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகும் நிலையில் பணி நிரந்தரம் செய்யாமல் தாமதம் செய்வது மேலும் வேதனை அளிக்கிறது. திமுக தேர்தல் வாக்குறுதி 181ல் குறிப்பிட்டவாறு எங்களை மனிதாபிமானத்துடன் முதல்வர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
பணி பாதுகாப்பு இல்லாத சூழலில் நாங்கள் பாதிக்கப்பட்டுள்ளோம். 12 ஆயிரம் பேருக்கு காலமுறை சம்பளம் கொடுத்து பணி நிரந்தரம் செய்ய அரசுக்கு பெரிய செலவு ஆகாது. தற்போது ₹ 10 ஆயிரம் தொகுப்பூதியம் கொடுக்க ஆண்டுக்கு ரூ. 130 கோடி செலவாகிறது. இன்னும் ரூ. 300 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கினால் போதுமானது. இதற்கு முதல்வர் மனசு வைத்தால் போதும்" என்றார்.