ஆகஸ்ட் 5ஆம் தேதி நடைபெற உள்ள வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார் நாம் தமிழர் கட்சியின் ராஜீவ்காந்தி.
பணப்பட்டுவடா புகாரால் வேலூர் பாராளுமன்றத் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அந்த புகாரில் எந்த நடவடிக்கையும் இல்லை, எந்த தண்டனையும் இல்லை, இந்த தேர்தல் தேவையற்றது என்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோதே சீமான் அறிக்கை வெளியிட்டார். இப்போது தேர்தலில் போட்டியிடுவது எதற்காக என்றால், எங்களுக்கு வாக்களிக்கக்கூடிய மாற்று வாக்காளர்களை மதிக்கிறோம். இந்த இரு கட்சிகளுக்கும் மாற்று நாம் தமிழர் கட்சிதான். அந்த அடிப்படையில் தேர்தலில் போட்டியிடுகிறோம். வெற்றி என்ற இலக்கோடுதான் இந்த தேர்தலை அணுகுகிறோம்.
திமுக, அதிமுகவில் பலமான வேட்பாளர்கள் நிற்கிறார்களே?
திமுக, அதிமுகவில் பலமான வேட்பாளர்கள்தான். அவர்கள் பணத்தை நம்பி நிற்கிறார்கள். அதனால் அவர்கள் பலமான வேட்பாளர்கள்தான். நாங்கள் மக்களை நம்பி நிற்கிறோம். அதிமுக கூட்டணி வேட்பாளராக நிற்கக்கூடியவர், ஒரு தனிக்கட்சி நடத்துகிறார். தன் கட்சி சார்பில் போட்டியிடாமல், தனது கட்சியை இன்னொரு கட்சியில் அடகு வைத்து போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெற்றால் பாஜகவுக்கு ஒரு கூடுதல் எம்பியாக இருக்கப்போகிறார். அதேபோல் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றால், திமுகவில் 37 எம்பிக்கள் என்பது 38 எம்பிக்களாக மாறும் அவ்வளவுதான்.
கமலின் மக்கள் நீதி மய்யம் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்று அறிக்கை வெளியிட்டுள்ளதே?
அவர்கள் சொல்லும் காரணம் சரியானதுதான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் இதனை தேர்தல் அறிவிக்கப்பட்டபோதே இந்த முடிவை எடுத்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டிருந்தால் அதனை நம்பலாம். கடைசி நேரத்தில் அறிவிக்கிறார்கள்.