'நிவர்' புயல் காரணமாக, வேலூர் மாவட்டம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டு, காட்பாடி, குடியாத்தம் தாலுக்காவில் 3 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயப் பயிர்கள் அழிந்து, விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
அதேநேரத்தில் பாலாறு உட்பட சிறு நதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆந்திராவில் மழை பெய்வதால் பாலாற்றில் அதிகளவு நீர் வருகிறது. விவசாயத்துக்குப் பயன்படும் அளவில் ஆற்று நீரை தேக்குவதற்குத் தேவையான அணைக்கட்டுகள் இல்லாத நிலை மற்றும் பாலாறு உட்பட கிளை நதிகளில் இருந்து ஏரிகளுக்குச் செல்லும் கால்வாய்களைச் சீர் செய்யாதது, குடிமராமத்துப் பணிகள் செய்யாதது உள்ளிட்ட காரணங்களால் ஏரிகளுக்குத் தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மோர்தானா அணையில் இருந்து நீர் வெளியேறி ஏரிகளுக்குச் செல்ல வேண்டும். ஆனால், அதிகாரிகள் கால்வாய்களைச் சீர் செய்யாததால் அணைக்கட்டுத் தொகுதியில் உள்ள சதுப்பேரி, பொய்கை, செதுவாலை உள்ளிட்ட 15 -க்கும் மேற்பட்ட ஏரிகளுக்கு நீர் செல்லவில்லை.
இதுபற்றி அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவும், வேலூர் மாவட்ட தி.மு.க மா.செவுமான நந்தகுமார் கவனத்துக்குச் சென்றது. தற்காலிகமாக தனது சொந்தச் செலவில் அந்தக் கால்வாய்களைத் தூர்வார இயந்திரங்களை வரவழைத்துப் பணிகளைச் செய்துள்ளார் நந்தகுமார். கால்வாய் சீரமைக்கும் பணிகளை உடனடியாகப் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடங்க வேண்டுமென அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசியுள்ளார். ஆனால் அதிகாரிகள் பணிகளைச் செய்யவில்லை.
இதனால், அதிகாரிகளைக் கண்டித்து, நவம்பர் 30 -ஆம் தேதி குடியாத்தம் – பள்ளிக்கொண்டா சாலையில், தி.மு.க.வினர் 200 பேரோடு மறியலில் ஈடுபட்டார் எம்.எல்.ஏ நந்தகுமார். அங்கு வேலூர், பள்ளிக்கொண்டா காவல்நிலைய காவலர்கள் பாதுகாப்புக்குக் குவிக்கப்பட்டனர். காவல்துறை அதிகாரி ஒருவர், எம்.எல்.ஏவிடம் ஒருமையில் பேசியுள்ளார். இதனைக் கேட்டு எம்.எல்.ஏவுடன் இருந்த தி.மு.க நிர்வாகிகள் கொதிப்படைந்து, மரியாதை கொடுத்து பேசுங்க எனச் சொல்ல, காவல்துறை அதிகாரிகளுக்கும் தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதமனாது. பின்னர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வந்து விரைவில் சரி செய்கிறோம் என்றனர். அதன்பின்னர் சாலைமறியலை கைவிட்டனர்.
இதுபற்றி நந்தகுமார் எம்.எல்.ஏ செய்தியாளர்களிடம் பேசும்போது, 29 ஆண்டுகளுக்குப் பின்பு மோர்தானா அணை நிரம்பி 10,500 கன அடி நீர் வெளியேறியது. அந்த நீர், கடலில் சென்று கலந்தது. மோர்தானா அணையின் கால்வாய் சீரமைத்திருந்தால், என் தொகுதியில் உள்ள ஏரிகள் நிரம்பியிருக்கும். ஆனால், அதிகாரிகள் அதனைச் செய்யவில்லை. மழைக்காலத்துக்கு முன்பே நாங்கள் கால்வாயைச் சீரமைக்க வேண்டும் எனப் போராட்டம் செய்தோம். அதிகாரிகள் பணமில்லை எனச் சொல்லி செய்யவில்லை. பொதுப் பணித்துறையின் உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு தந்தோம். இந்த அ.தி.மு.க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் நீர் வந்திருக்கும், தி.மு.க.வினரான நாங்கள் இப்போது போராட வேண்டியிருக்காது. நான் சொந்தச் செலவில் கால்வாயை சீரமைத்துக்கொண்டு இருக்கிறேன். அதனைச் செய்யக்கூடாது என அதிகாரிகள் தடுக்கிறார்கள். தி.மு.க.வுக்கு பெயர் வந்துவிடும் என அதிகாரிகள் தடுப்பது நியாயமா எனக் கேள்வி எழுப்பினார்.
கால்வாயைச் சீரமைக்கிறோம் எனச் சாலை மறியலின்போது அதிகாரிகள் கூறினார்களே தவிர, இப்போதுவரை சீரமைக்கும் பணியைச் செய்யவில்லை. இதனால் எம்.எல்.ஏ நந்தகுமார், தனது சொந்த நிதியில் இருந்து தொடர்ந்து கால்வாய் சீரமைக்கும் பணியினை செய்துவருகிறார்.
வேலூர் மாவட்ட ஆட்சியராக உள்ள சண்முகசுந்தரத்துக்கும் – அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏ நந்தகுமாருக்கும் இடையே முரண்பாடு உள்ளது. இந்த முரண்பாட்டுக்குக் காரணம், எம்.எல்.ஏ என்கிற முறையில், மக்கள் தந்த கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் கொண்டுசென்று தர முயன்றபோது, வாங்காமல் போக்குக் காட்டியவர் கலெக்டர். அதோடு, அதிகாரிகள் சரியாகச் செயல்படாதது குறித்து மேடையிலேயே அமைச்சர் வீரமணி முன்னிலையிலேயே கூறியது, அமைச்சரின் அத்துமீறிய பேச்சை, மேடையிலேயே கண்டித்தது போன்றவற்றால் கலெக்டர் அதிருப்தியாகி, எம்.எல்.ஏ நந்தகுமார் எதாவது செய்யுங்கள் என்றால் செய்யாதீர்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.