தென்னிந்திய திருச்சபையின் கட்டுப்பாட்டின் கீழ் 22 மறைமாவட்டங்கள் உள்ளன. அதில் குறிப்பிடத்தக்கது வேலூர் மறை மாவட்டம். சென்னை மறைமாவட்டத்தின் கட்டுப்பாட்டில் இருந்த மேற்குப் பகுதியை பிரித்து 1976 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி வேலூர் மறைமாவட்டம் உருவாக்கப்பட்டது. இதன் முதல் மறைமாவட்ட பங்கு தந்தையாக டாக்டர் சாம் ஜே. பொன்னையா நியமிக்கப்பட்டார்.
வேலூர் மறை மாவட்ட திருச்சபையின் கீழ் 99 துவக்கப் பள்ளிகள், 4 ஆரம்ப பள்ளிகள், 5 உயர்நிலைப்பள்ளிகள், 5 மேல்நிலைப்பள்ளிகள், 2 ஆசிரியர்கள் பயிற்சி நிலையங்கள், ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 2 மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள், 2 செவிலியர் பள்ளிகள் மற்றும் வந்தவாசி, இராணிப்பேட்டையில் மருத்துவமனைகள் உள்ளன. கோடிக்கணக்கான சொத்துக்கள் மற்றும் வருமானம் வரும் இந்த வேலூர் மறை மாவட்டம் மிக முக்கியமானது.
சி.எஸ்.ஐ. வேலூர் பேராயத்துக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பேராயராக பதவி ஏற்றுக்கொண்ட ஆயர்.ராஜவேலு அவர்களின் பதவிகாலம் கடந்த ஆண்டு நிறைவடைந்தது. அதனையடுத்து புதிய பேராயரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. அதில் ஆயர்கள் சர்மா நித்தியானந்தம், சம்பத், ஐசக் கதிர்வேலு, சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். முடிவு அறிவிப்பதில் குழப்பம் ஏற்பட்டதால் பேராயர் யார் என்பதை அறிவிப்பதில் இழுபறி நிலவியது. இதனால் பொறுப்பு பேராயராக மேத்யூ ரவீந்தர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் வேலூரின் புதிய பேராயராக ஆயர் சர்மா நித்தியானந்தம் என்பவரை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது தென்னிந்திய திருச்சபை பேராயத்தின் சினாட் மாடரேட்டர் அலுவலகம் .
இதனை தொடர்ந்து மே 19ந்தேதி மாலை பதவியேற்றுக்கொண்ட பேராயர், மே 20ந்தேதி முதல் தனது அலுவல்களை தொடங்கியுள்ளார். கடந்த பேராயர் காலத்தில் பெரும் ஊழல் மற்றும் பதவி துஷ்பிரயோக சர்ச்சைகள் எழுந்து காவல்நிலையத்தில் புகார்கள் பதிவாகியுள்ளன. புதிய பேராயர் காலத்தில் அது இருக்காது என நம்புகின்றனர் ஆயிரக்கணக்கில் உள்ள சி.எஸ்.ஐ உறுப்பினர்களாக உள்ள கிருஸ்த்துவ மக்கள்.