வேலூர் மத்திய சிறையில் உண்ணாவிரதத்தை முருகன், நளினி கைவிட்டனர்
வேலூர் மத்திய சிறையில் 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த முருகனும், 3வது நாளாக உண்ணாவிரதம் இருந்த நளினியும் போராட்டத்தை கைவிட்டார். முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் சிறையிலேயே ஜீவசமாதி அடையும் நோக்கில் கடந்த 18ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரதம் இருந்து வந்தார். அவரது உண்ணாவிரதத்தை முடித்து வைக்க கோரி உறவினர் ஒருவர் நீதிமன்றத்தை நாடினார். அதேபோல் அவரது மனைவி நளினியும் வேலூர் பெண்கள் தனிச்சிறையில் 28ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். நேற்று முருகன் 13வது நாளாகவும், நளினி 3வது நாளாகவும் உண்ணாவிரதத்தை தொடர்ந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை டிஐஜி பாஸ்கரன், கண்காணிப்பாளர்கள் சண்முகசுந்தரம், ராஜலட்சுமி ஆகியோர் முருகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது முருகன் கோரிக்கைப்படி நளினியை இன்று சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாகவும், உறவினர்கள் சந்திக்க இருந்த 3 மாத தடையை விலக்கவும் ஒப்புக் கொண்டனர். இதையடுத்து முருகன் தனது உண்ணாவிரதத்தை கைவிட்டு இளநீர் மற்றும் பால் குடித்தார்.மேலும், தான் உண்ணாவிரதத்தை கைவிடுவதாக கடிதம் எழுதி கொடுத்தார். இதை தெரிவித்ததையடுத்து, நளினியும் இளநீர், பால் குடித்து உண்ணாவிரதத்தை கைவிட்டார்.