தமிழகத்தின் 33 -வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என தமிழக முதல்வராக உள்ள எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது கள்ளக்குறிச்சி பகுதி மக்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ள நிலையில் வேலூர் மாவட்டம் திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதி மக்களை அரசு மீது அதிருப்தியடைய வைத்துள்ளது.
வேலூர் மாவட்டம் தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் மிகப்பெரிய மாவட்டம். காஞ்சிபுரம் அருகே தொடங்கி, தருமபுரி மாவட்டம் பர்கூர் அருகே முடிகிறது வேலூர் மாவட்டம். 5921 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இந்த மாவட்டத்தில் சுமார் 40 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் என 3 வருவாய் கோட்டங்கள், 13 வருவாய் வட்டங்கள், 20 ஊராட்சி ஒன்றியங்கள், 12 நகராட்சிகள், 16 பேரூராட்சிகள் , 842 வருவாய் கிராமங்கள் கொண்ட மாவட்டமது. இதில் 13 சட்டமன்ற தொகுதிகள், 2 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன.
1597ல் வேலூர் கோட்டை உருவாக்கப்பட்டு பலப்பல மன்னர்களின் கீழ் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆங்கிலேயர் காலத்தில் வடாற்காடு மாவட்டம் என்கிற பெயரில் வேலூர், அரக்கோணம், வாலாஜா, திருவண்ணாமலை, ஆரணி, வந்தவாசி, செய்யார், திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி பகுதிகள் உள்ளடக்கிய மாவட்டமாக இருந்தது.
மிகப்பெரிய மாவட்டமாக இருப்பதால் இதனை பிரிக்க வேண்டுமென திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர், போராட்டம் நடத்தினர். 1989ல் திமுக ஆட்சிக்காலத்தில் முதல்வராக இருந்த கலைஞர் திருவண்ணாமலை சம்புவராயர் மாவட்டம் என்கிற பெயரில் வேலூர் மாவட்டத்தில் இருந்து திருவண்ணாமலையை தலைமையிடமாக கொண்டு உருவாக்கப்பட்டது.
அப்போது முதல் திருப்பத்தூர், நாட்றாம்பள்ளி, ஜோலார்பேட்டை பகுதி மக்கள் திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக உருவாக்கித்தாருங்கள் எனக்கோரிக்கை விடுத்தும், போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த 25 ஆண்டுகளாக அதை திமுக, அதிமுக என எந்த கட்சி ஆட்சியில் இருந்தும் கண்டுக்கொள்ளவில்லை. ஒவ்வொரு சட்டமன்ற, நாடாளமன்ற தேர்தலின்போதும் வேட்பாளர்கள் தனி மாவட்டமாக உருவாக்கித்தருகிறோம் என வாக்குறுதி தருவார்கள், வெற்றி பெற்றபின் அதை மறந்துவிடுவார்கள் இதுதான் வாடிக்கையாக இருந்துவந்தது.
கடந்த 25 வருடங்களில் வேலூர் மாவட்டத்தை விட சிறிய மாவட்டமான பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து அரியலூர், கோவை மாவட்டத்தில் இருந்து திருப்பூர் போன்ற மாவட்டங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால் வேலூர் மாவட்டம் பிரிக்கப்படாமல் இருந்து வந்தது. இதற்கிடையே அரக்கோணத்தை தலைமையிடமாக கொண்டு ஒரு மாவட்டம் உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்து, எழுந்த வேகத்தில் அது அடங்கியது.
இந்நிலையில் 2019 ஜனவரி 8ந்தேதி, சட்டமன்றத்தில் முதல்வர் எடப்பாடி.பழனிச்சாமி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ளார். இது திருப்பத்தூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் வேண்டும் என போராடியவர்களை அதிரவைத்துள்ளது.