வேளாங்கன்னிக்கு சுற்றுலா சென்றுவிட்டு ஊர் திரும்பிய மினி பஸ்சை சோதனை செய்வதாக கூறி பெண்களிடம் அத்துமீறிய காவலர்களுக்கு அடி பின்னியெடுத்துவிட்டனர். விசாரணைக்காக திருவாரூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட 25 பெண்கள் உள்ளிட்ட 30 சுற்றுலா பயணிகளை 4 மணி நேர விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.
கர்நாடக மாநிலம் பெங்களுர் நகர் பகுதியை சோ்ந்த ராஜேஷ் தனது குடும்பத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களுடன் தஞ்சைக்கு ரயிலில் வந்து மினி பஸ்சை வாடகைக்கு எடுத்து கொண்டு வேளாங்கன்னிக்கு ஒரு வாரம் சுற்றுலாவாக வந்துள்ளனர். இன்று தங்களது சுற்றுலாவை முடித்து கொண்டு பெங்களுருக்கு செல்ல தஞ்சையில் ரயில் ஏற மினி பஸ்சில் மூலம் ஊர் திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது திருவாரூர் அருகே சோழங்கநல்லூர் என்ற இடத்தில் மதுவிலக்கு காவல் பிரிவை சோ்ந்த காவலர்கள் இளவரசன் மற்றும் சங்கர் இருவரும் ரஜேஷ் குடும்பத்தினர் வந்த மினி பஸ்சை குறுக்கே நின்று நிறுத்தினர். காவலர்கள் இருவரும் காவலர் உடையிலில்லாததால் மினிபஸ்சின் ஓட்டுநர் இருவர் லிப்டு கேட்பதாக நினைத்துக்கொண்டு பஸ்சை நிறுத்தாமல் சென்றுள்ளார். காவலர்கள் இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் அந்த மினி பஸ்சை விரட்டி ஒரு கிலோமீீட்டர் தூரம் துரத்தி நிறுத்தினர், அப்போது ஓட்டுநரை பஸ்சை ஏன் நிறுத்த வில்லை என இருவரும் கேட்டு தாறுமாறாக திட்டிக்கொண்டே அடிக்கப்பாய்ந்தனர்.
அதோடு பஸ்சிற்குள் புகுந்து ஒவ்வொருவர் பைகளையும் சோதனை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். பஸ்சில் உள்ள பெண்கள் எங்கள் உடமைகளை சோதனை செய்ய நீங்கள் யார் என்று கேட்டுள்ளனர். காவலர்களோ, இருவரும் போலீஸ் என கூற அடையாள அட்டையை காண்பிக்க சொல்லி சுற்றுலா பயணிகள் கூறியுள்ளனர். ஆனால் காவலர்கள் இருவரும் அடையாள அட்டையை காண்பிக்காமல் பெண்களிடம் அத்துமீறி அவர்களை தாக்கி தகாத வார்த்தையில் திட்டியுள்ளனர்.
இதனையடுத்து வாகனத்தில் இருந்த அனைவரும் சேர்ந்து இருவரும் காவலர்களா என்ற சந்தேகம் ஏற்பட்டு அவர்களை தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் அறிந்த வைப்பூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மினி பஸ்சுடன் அனைவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
சுமார் 4 மணிக்கு அழைத்து சென்றவர்களை விசாரணை என்ற பெயரில் காவல்நிலையத்தில் அமர வைத்து விட்டனர். சுற்றுலா பயணிகள் அனைவரும் மாலை 7 மணிக்கு ரயிலுக்கு செல்ல வேண்டும் என எவ்வளவு எடுத்து கூறியும் காவல்துறையினரின் காதுகளுக்கு எட்டவில்லை.
இந்நிலையில் இந்த செய்தி ஊடகங்களில் வெளி வர காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட வருவாய் துறையினர் தலையிட்டு சுமார் 4 மணி நேரத்திற்கு பிறகு சுற்றுலா பயணிகளிடம் வருத்தம் தொிவித்து அவர்களை விடுவித்தனர்.
சுற்றுலா பயணிகள் தாங்கள் விடுவிக்கப்பட்டதற்கு ஊடகத்துறையினருக்கு நன்றி தொிவித்துவிட்டு மகிழ்ச்சியுடன் ஊர் திரும்பினர். இந்த சம்பவத்திற்கு காவல்துறையினர் காவல் உடையில்லாதததும் அவர்கள் தங்கள் அடையாள அட்டையை காண்பிக்காததும், பெண்களிடம் அத்துமீறி நடந்து கொண்டது தான் என சுற்றுலா பயணிகள் தொிவித்தனர்.