லாரிகளுக்கான இன்சூரன்ஸ் புதுபித்தலுக்கு ஆறு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறியது, கரோனா ஊரடங்கு காலத்தில் டீசல் விலை லிட்டருக்கு 13 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு உள்ளது. தமிழக அரசும் மதிப்புக்கூட்டு வரியை உயர்த்தியுள்ளது.
தமிழகத்தில் பெரிய தொழிற்சாலைகள் திறக்கப்படாததால் 50 சதவீத லாரிகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பெரும்பாலான லாரி உரிமையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி, லாரிகளை இயக்க முடியாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
லாரிக்கான காலாண்டு வரியை, ஏற்கனவே இரண்டுமுறை செலுத்தி உள்ளோம். தற்போது லாரி தொழில் மிகவும் நலிவடைந்து உள்ளதால், 3வது முறைக்கான காலாண்டு வரியை மாநில அரசு ரத்து செய்ய வேண்டும். லாரிகள் விபத்துகளை சந்திக்காத வகையில், பிரதிபலிக்கும் ஸ்டிக்கரை ஒட்ட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுபோன்ற உத்தரவுகளை மற்ற மாநில அரசுகள் கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்தப்பட்டுவிட்டது. பெங்களூருவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட தனியார் கம்பெனியில் மட்டும்தான் இவ்வகை ஸ்டிக்கர்களை வாங்கி ஒட்ட வேண்டும் என்று அறிவித்துள்ளது. இதனால் லாரி ஒன்றுக்கு 6 ஆயிரம் ரூபாய் வரை செலவாகும்.
மத்திய அரசு, டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும். ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வாகன கடனுக்கான கால அவகாசத்தை மேலும் 6 மாத காலம் நீட்டிக்க வேண்டும். கரோனா காலத்தில் வாகனங்கள் ஓடாததால் சாலை விபத்துகள் குறைந்துள்ளன. இதனால், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிக லாபம் அடைந்துள்ளன. எனவே லாரிகளுக்கு இன்சூரன்ஸ் புதுப்பித்தல் காலத்தை 6 மாத காலத்திற்கு தள்ளி வைக்க வேண்டும்.
மத்திய அரசு வாகனங்களுக்கான ஓட்டுநர் உரிமம், தேசிய அனுமதி சான்று, வாகன புதுப்பித்தல் சான்றுகள் ஆகியவற்றை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிக்க வேண்டும். இந்த கோரிக்கையை இன்னும் இரண்டு வார காலத்தில், மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும். இல்லாவிட்டால் வரும் 20ம் தேதி, நாமக்கல்லில் நடைபெறும் மாநில லாரி உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் முக்கிய முடிவுகள் அறிவிக்கப்படும். அது வேலைநிறுத்த போராட்டமாக இருக்கும்” இவ்வாறு குமாரசாமி கூறினார். அப்போது, சங்கத்தின் செயலாளர் வாங்கிலி, பொருளாளர் தன்ராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.