Skip to main content

சென்னையில் நடமாடும் வாகனங்களில் காய்கறி விற்பனை தொடக்கம்

Published on 07/12/2023 | Edited on 07/12/2023

 

 Vegetation sales start in mobile vehicles in Chennai

 

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும், தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

 

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகிறனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

 

அதே சமயம் மழை பாதித்துள்ள பகுதிகளில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தை தடுக்கும் வகையில் தமிழக அரசு சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாகப் பலத்த மழை பெய்ததால் போக்குவரத்து பாதித்து காய்கறிகளைக் கொண்டு வரும் லாரிகள் சென்னை நகருக்கு வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் காய்கறிகள் வரத்து குறைந்ததால் சென்னையில் காய்கறிகளின் விலை கிலோவுக்கு 5 ரூபாயில் இருந்து 15 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. இந்நிலையில் குறைந்த விலையில் காய்கறி விற்பனையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதன் மூலம் மழை பாதித்த இடங்களில் நடமாடும் வாகனங்கள் மூலம் அனைத்து காய்கறிகளும் அரை கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்