கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதியில் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்திருந்தால் இன்னும் சிறப்பானதாக இருந்திருக்கும் என்பதுதான் எல்லோருடைய கருத்து. மழைக்காலம் வருவதற்கு முன்பே கால்வாய்களை, ஏரிகளை, ஆறுகளை சுத்தம் செய்கின்ற அந்தப் பணிகளை இந்த அரசு முறையாக நடத்திடவில்லை. 8 மாவட்டங்களை பொறுத்தவரையில் இந்த புயலின் காரணத்தினால் மின்சாரம் அறவே துண்டிக்கப்பட்டுள்ளது. உடனடியாக மின்தடை ஏற்பட்டுள்ள பகுதிகளில் அதற்கு உரிய நடவடிக்கையை இந்த அரசு எடுக்க வேண்டும்.
வீடுகள் இடிந்த காரணத்தினால் ஏறக்குறைய 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏறக்குறைய ஒரு லட்சம் பேர் இதனால் பாதிக்கப்பட்டு ஆங்காங்கே இருக்கக்கூடிய முகாம்களில் அவர்கள் இருக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது. உடனடியாக இந்த புயலினால் ஏற்பட்ட இழப்பீடை தயாரித்து அதற்கு உரிய இழப்பீடை பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு வழங்கிட வேண்டும்.
முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லியிருக்கிறார். அவருடைய சொல் சொல்லோடு நின்றுவிடக்கூடாது. செயல்வடிவத்திலே இருக்க வேண்டும். ஏற்கனவே இறந்துபோனவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். அதுபோதுமானதாக இல்லை. 25 லட்சம் ரூபாய் அவர்களுக்கு வழங்க வேண்டும். இறந்துபோனவர்களுடைய குடும்பத்தினர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும்.
புயலினால், மழையினால் பாதிக்கப்பட்ட பல இடங்களை பார்வையிட்டேன். குறிப்பாக வேதாரண்யம் சட்டமன்றத் தொகுதியில் பார்வையிட்டேன். அந்த தொகுதியில் ஆங்காங்கே உள்ள கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள். அவர்களிடம் ஏன் சாலை மறியல் என கேட்டபோது, இந்த தொகுதியின் எம்எல்ஏ, அமைச்சர் ஓ.எஸ்.மணியன், எங்கேயும் பாதிப்பு கிடையாது என்று அறிக்கை வெளியிடுகிறார். சகஜ நிலையில் மக்கள் இருக்கிறார்கள் என்று தவறான அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். இப்படி சொல்லிவிட்டு மெயின்ரோடு வழியாக போய்க்கொண்டிருக்கிறாரேயொழிய எங்கள் கிராமப்பகுதியில் எந்த இடத்திற்கும் வந்து அவர் பார்வையிடவில்லை. அப்படி அவரை வழிமறித்து நாங்கள் அழைத்த நேரத்தில் இல்லை நான் வரமுடியாது என்று மறுத்திருக்கிறார்.
அதுமட்டுமல்ல, இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் ஒரு அமைச்சர், சாலை மறியலில் ஈடுபட்டுள்ள மக்களிடத்தில் சமாதானம் செய்ய முடியாத சூழ்நிலையில் அவர் வந்த அரசாங்கத்தின் காரையே அப்படியே சாலையில் விட்டுவிட்டு சுவர் ஏறி குதித்து ஓடியிருப்பதாக அப்பகுதி மக்களெல்லாம் குறிப்பிட்டு சொல்லியிருக்கிறார்கள்.
இன்றோடு 3வது நாள். நியாயமாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாதிக்கப்பட்ட இடத்திற்கு வந்திருக்க வேண்டும். அவர் வராதது கண்டத்திற்கு உரியது. இனிமேலாவது உடனடியாக அவர் வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வதோடு அல்லாமல், அவர்களது வாழ்வாதாரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும் என்றார்.