விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் சென்னை கோட்டையில் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவை சந்தித்து மனு கொடுத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’பொன்பரப்பியில் வன்முறைக்கு காரணமானவர்கள் பற்றி பெயர் குறிப்பிட்டவர்களில் 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த சம்பவத்தில் இந்து முன்னணியினரும் சம்பந்தப்பட்டுள்ளார்கள். அவர்களது பெயரை குறிப்பிட்டும் இதுவரை கைது செய்யவில்லை.

கூட்டணி கட்சியினர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தும் அந்த சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று முதல்வரும், துணை முதல்வரும் கூறியதில் இருந்தே அங்கு எவ்வளவு பெரிய வன்முறை வெறியாட்டம் நடந்து இருக்கும் என்று அறிந்து கொள்ள முடியும்.
பொன்பரப்பி சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும் வருகிற 24-ந்தேதி புதன்கிழமை திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு நான் தலைமை தாங்குகிறேன். கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள்’’என்று தெரிவித்தார்.