வர்தா புயலில் மாயமான மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீட்டு கோரிய மனுவை 4 வாரங்களில் பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வீசிய வர்தா புயலின் போது கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 9 மீனவர்கள் மாயமாகினர். இதில் இருவரது உடல் மட்டும் நாகப்பட்டினம் பகுதியில் கரை ஒதுங்கியது. உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்பட்ட நிலையில், பேரிடர் மேலாண்மை நிதியத்திலிருந்து 4 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என 2016 டிசம்பரில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி, சென்னையை சேர்ந்த பிரதீப் குமார் என்பவர் பொது நல மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், 4லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகையை உடனே வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சமீபத்தில் ஏற்பட்ட ஒக்கி புயலின் போது இழப்பீடு வழங்குவது குறித்து விதிகள் அடங்கிய அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.அதனை பதிவு செய்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையை நான்கு வாரங்களுக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர். மேலும், அதுதொடர்பான அறிக்கையை அக்டோபர் 24ஆம் தேதி தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.