இந்தியத் திருநாட்டின் 75-ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. விருத்தாசலம் சார் ஆட்சியர் அமித் குமார் தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தியதுடன், பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கி பாராட்டினார்.
அப்போது நிகழ்ச்சிக்காக கொடிக்கம்பம் அருகே வண்ணக் கோலங்கள் போடப்பட்டு "வந்தேமாதரம்" என்று எழுதப்பட்டிருந்தது. இந்த வந்தே மாதரம் முறையே ஆங்கிலம், இந்தி, தமிழ் மொழியில் எழுதப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்த வருவாய்த்துறையினர் மற்றும் பொதுமக்கள் சிலர் மத்திய அரசுத்துறை அலுவலகங்களில் மட்டும்தான் இந்தி மொழி ஆளுமை செய்து வந்தது. தற்போது மாநில அரசு அலுவலகங்களிலும் இந்தி மொழி கையாளப்பட்டு வருவதற்கு எடுத்துக்காட்டாக இது திகழ்வதாகப் பேசிக்கொண்டனர்.
அதிலும் முதலாவதாக ஆங்கிலத்திலும், இரண்டாவதாக இந்தியிலும், கடைசியாக தமிழிலும் ‘வந்தே மாதரம்’ என எழுதப்பட்டிருப்பது தமிழர்களையும், தமிழ் மொழியும் இழிவுபடுத்துவது போல் இருப்பதாகவும் பேசிக் கொண்டனர். தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் தமிழ் மொழி அலுவல் மொழியாக இருக்க வேண்டும். மேலும் தமிழகத்தில் இதுபோன்று இந்தி மொழிக்கு முக்கியத்துவம் அளிப்பதை தமிழக அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.