கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. இது தமிழக மக்களுக்கு சற்று ஆறுதலை அளித்துள்ளது.
குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருப்பினும், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அதேபோல், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் இளைஞர்கள் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன.
இதனால் கரோனா பாதிப்பு குறைந்து வரும் மாவட்டங்களில் வரும் வாரங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் கூறுகின்றன.
இந்நிலையில், சென்னை அருகே உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் 11 சிங்கங்களுக்கு பசியின்மை, சளி தொந்தரவு இருந்ததால், ஆய்வகத்திற்கு சிங்கங்களின் சளி மாதிரிகள் அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் 9 சிங்கங்களுக்கு கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த தகவலை உயிரியல் பூங்கா நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.