திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் இருந்து குப்பநத்தம் அணைக்கு செல்லும் பாதையில் உள்ளது பரமனந்தல் ஊராட்சிக்கு உட்பட்ட காமராஜர் நகர் கிராமம். இது செங்கம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமமாகும். இந்த கிராமத்தில் சாலை வசதியில்லை, கால்வாய்கள் தூர்வாரவில்லை, கொசுத்தொல்லை அதிகரிப்பு, மின் விளக்கு எரியவில்லை. குடிநீர் சரியாக விநியோகிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து, இதனை சரி செய்து தர வேண்டும் என பலமுறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு கோரிக்கை மனுவை தந்துள்ளனர்.
ஆனால் அதிகாரிகள் கண்டுக்கொள்ளவில்லையாம், இதேப்போன்ற மனுவை மாவட்ட ஆட்சியா் அலுவலத்துக்கு அனுப்பியபோது, 'உடனடியாக நடவடிக்கை எடுங்கள்' என செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கே அனுப்பியுள்ளனர். இங்குள்ள அதிகாரிகள் எதையும் பரமனந்தல் கிராமத்துக்கு செய்யவில்லையாம்.
இந்நிலையில் குப்பநத்தம் அணையை பாசனத்துக்காக திறக்க அமைச்சர் சேவூர்.ராமச்சந்திரன், எம்.எல்.ஏ, அதிகாரிகள் என அனைவரும் வருகை தந்தனர். அப்போது பரமனந்தல் காமராஜர் நகர் மக்கள், அவ்வழியாக வந்த வட்டார வளர்ச்சி அலுவலரின் மடக்கி முற்றுகையிட்டனர். "தங்கள் பகுதியில் ஊராட்சி செயலாளர் ஜெயமோகன் இதுவரை எந்தவித அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை, கேள்வி எழுப்பினால் மோசமாக திட்டுகிறார், உங்கள் அலுவலகத்துக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எங்களுக்கு பதில் சொல்லிவிட்டு செல்லுங்கள், இல்லையேல் அமைச்சரின் காரை மறித்து பிரச்சனையை கூறுவோம்" என எச்சரித்தனர்.
காரை விட்டு இறங்காத அந்த அதிகாரி, நான் செய்து தருகிறேன் எனச்சொல்லி சமாளித்து, மக்களை சமாதானப்படுத்திவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். "நான் செய்யறன்னு சொல்லி ஏமாத்திட்டு போறார், மக்களும் ஏமாந்தது தெரியாம நிக்கறாங்க" என்கிறார்கள் அக்கிராம இளைஞர்கள்.