கிரிமினல் வேலைகளில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் கைது செய்யலாம், அவர்களின் மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் ஆனால் ஆபத்துக்கு உதவும் எங்களையும் போலீசார் ஏதோ கிரிமினல் போல ட்ரீட் செய்யலாமா? என கேள்வி கேட்கிறார்கள் இவர்கள்.
ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் வியாழக்கிழமை திரண்டு வந்து எஸ்.பி.யை சந்தித்து மனு கொடுத்தனர்.
பிறகு அவர்கள் கூறும்போது, "ஈரோடு மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதியிலும் நாங்கள் தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் வாகனங்களை இயக்கி வருகிறோம். பல ஆண்டுகளாக நாங்கள் அனாதை பிணம், தற்கொலை, கொலை, தூக்கு போட்டவர்கள், தண்ணீரில் மூழ்கியவர்கள், தீ குளித்தவர்கள், விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டவர்கள் என அவர்கள் உடல் நிலை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அவரது உடல்களை போலீசுடன் சேர்ந்து அப்புறப் படுத்துவதிலும் அது விசாரணைக்காக கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்யும் வரையிலும் உள்ள அனைத்து பணிகளையும் நாங்கள் ஈடுபாட்டுடன் செய்து வருகிறோம்.
அதுமட்டுமல்ல சாலை விபத்தின் போது 108 அம்புலன்ஸ் இல்லாத போது அவசர கால நேரத்தில் அனைத்து வித உயிர் காக்கும் பணியில் எங்கள் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.
ஆனால் கடந்த சில நாட்களாக சில போலீஸ் அதிகாரிகள் தனியார் ஆம்புலன்ஸ் செல்லும்போது அதை நிறுத்தி விசாரணை என்ற பெயரில் கேஸ் போடுவதும் ஆய்வு செய்வதும் நாங்கள் ஏதோ கிரிமினல்கள் என்ற எண்னத்துடன் நடந்து கொள்கிறார்கள் எனவே எஸ்.பி. இந்த விஷயத்தில் தலையிட்டு நடவடிக்கை எடுத்து எங்கள் பணிக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். என கேட்டுக் கொண்டோம்" என்றனர்.
பகலிலே வீடு புகுந்து திருடுபவன், டூவீலரில் ஹெல்மெட் போட்டுக் கொண்டு பெண்களின் தாலிக்கொடியை அபகரிப்பவனையெல்லாம் விட்டு விட்டு ஆபத்துக்கு உதவும் ஆம்புலன்ஸ் டிரைவர்களா கிடைத்தார்கள் இவர்களுக்கு....?