தமிழகத்தில் இரண்டாம் அலை கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு பெரும்பாலும் ரெம்டெசிவிர் மருந்து பரிந்துரைக்கப்படுகிறது. தற்போது ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் உறவினர்களை வெளியில் இருந்து ரெம்டெசிவிர் மருந்தை வாங்கி வர பரிந்துரைகின்றனர். ஒரு டோஸ் ரெம்டெசிவிர் 1,500 ரூபாய் என இருக்கும் நிலையில் கள்ளச் சந்தையில் இதன் விலை பல்லாயிரக்கணக்கில் கூடி உள்ளது.
இந்நிலையில் சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம் டெசிவிர் மருந்து விற்பனை நேற்று முன்தினம் துவங்கியது. இரண்டாவது நாளான நேற்று பல்வேறு மாவட்டங்களிலிருந்து ரெம்டெசிவிரை வாங்க நோயாளிகளின் உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிகாலையிலேயே குவிந்தனர். அறிவிக்கப்பட்ட நேரத்தில் மருந்துகள் வழங்கப்படாததால் அங்கு நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களால் சிறிது நேரம் கூச்சம் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் டோக்கன் பெற்றவர்கள் உரிய ஆவணங்களை காண்பித்து ரெம்டெசிவிர் மருந்தினை வாங்கி சென்றனர். அதிகபட்சமாக ஒரு நபருக்கு 6 டோஸ் வரை மட்டுமே கொடுக்கப்பட்டது. நேற்று மாலை 5 மணி வரை மருந்து விநியோகிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில், 5 மணிக்குப் பிறகும் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். அவர்களை கலைந்து செல்லுமாறு போலீசார் வற்புறுத்தியதால் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று அதே மருத்துவமனை வளாகத்தில் மக்கள் அதிகம் குவிந்துள்ள நிலையில், கள்ளச்சந்தையில் டோக்கன்கள் விநியோக்கிப்படுவதாக அங்கு மருந்து வாங்க குவிந்த மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். 3000 ரூபாய், 4000 ரூபாய் பெற்றுக்கொண்டு டோக்கன் விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக இடைவெளியின்றி அங்கு மக்கள் ரெம்டெசிவிர் மருந்து வாங்க உயிரை பணையம் வைத்து காத்திருக்கும் நிலையில் மருந்துக்கான டோக்கன் கள்ளச்சந்தையில் முறைகேடாக விநியோகிப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.