வள்ளுவரின் சிலைபார்த்தான்; சிறப்பைப் பார்த்தான்
வள்ளுவத்தின் உயரத்தை நினைத்துப் பார்த்தான்;
கள்ளூறும் தமிழ்மொழியின் சுவையை எல்லாம்
கணக்கிட்டு நெடுநேரம் வெறித்துப் பார்த்தான்.
நள்ளிரவு மூளைகளை விடிய வைக்க
நல்லறத்தைச் சொன்னவனை வெறுப்பாய்ப் பார்த்தான்.
உள்ளத்தால் முடமான அவனோ காவி
உடைகொண்டு வள்ளுவரைப் போர்த்திப் பார்த்தான்.
இவ்விழிவு வள்ளுவர்க்குப் போதா தென்றே
இழிந்தமகன் திருநீறும் பூசிப் பார்த்தான்!
அவ்வளவு அடையாள மாற்றம் செய்தும்
அறப்புலவன் முகவரியோ மாற வில்லை.
இவ்வரிய சிறப்புதனைச் சகித்தி டாதோன்
இதயத்தில் வழி்கின்ற அழுக்கை யள்ளி
செவ்வியநம் வள்ளுவரின் முகத்தில் தேய்த்தான்
தேய்த்தவன்தான் முழுதாக நாறிப் போனான்!
அறப்புலவன் வள்ளுவனை வெறுப்பார் உண்டா?
அவன்வளர்த்த சிந்தனையை வென்றார் உண்டா?
திறக்காத கதவுகளைத் திறந்து வைக்கும்
திருக்குறளின் நாயகனைக் கசந்தார் உண்டா?
நிறமின்றி எல்லோர்க்கும் பொதுவாய் நிற்கும்
நெடும்புலவன் மானுடத்தின் தலைவன் ஆவான்.
சிறப்புமிகும் வள்ளுவனை இழிவு செய்வோன்
சித்தமெலாம் பித்தேறித் திரிவோன் ஆவான்.