கடலூர் மாவட்டம், பண்ருட்டி நகரில் உள்ள வர்ஷினி நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் குமாரவேல். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு ஆறு வயதில் வர்ஷினி, நான்கு வயதில் ராகுல் என பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி பூட்டிக்கிடந்த வீட்டுக்குள்ளிருந்து வீட்டு வாசற்படி வழியே ரத்தம் வழிந்து வெளியே ஓடி உள்ளது.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். பண்ருட்டி டிஎஸ்பி நாகராஜன் இன்ஸ்பெக்டர் சண்முகம் ஆகியோர் விரைந்து வந்து பூட்டியிருந்த வீட்டை திறந்து பார்த்தபோது குமாரவேல் மனைவி ராஜேஸ்வரி தலை நசுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கணவர் குழந்தைகள் யாரும் அங்கு இல்லை. இதையடுத்து நெய்வேலி இந்திராநகர் வசிக்கும் ராஜேஸ்வரியின் தாயார் சுசீலா அளித்த புகாரின் பேரில் போலீசார் தீவிர விசாரணை செய்தனர்.
விசாரணையில் காடாம்புலியூர் சேர்ந்த வாடகை கார் ஓட்டும் டிரைவர் குமரவேலுக்கும், ராஜேஸ்வரிக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். சில ஆண்டுகள் காடாம்புலியூரில் வசித்து வந்துள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பண்ருட்டி வர்ஷா நகரில் குடியேறினர் என தெரிய வந்தது.
அந்த வீட்டில் கிடந்த செல்போனை கண்டெடுத்த போலீசார் அந்த போனிலிருந்து எண்களை கண்காணித்து தலைமறைவான ராஜேஸ்வரி கணவர் குமரவேலுவை காடாம்புலியூர் பகுதியில் தேடிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
குமாரவேல் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், என் மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். எங்கள் இருவருக்கும் சமீபகாலமாக அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டது. இதனால் என்னிடம் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றாள். அங்கிருந்து எனக்கு விவாகரத்து கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். அதன் பிறகு சமாதானமாக போனாம். ராஜேஸ்வரி விருப்பபடி பண்ருட்டி வர்ஷா நகரில் குடியேறினோம். இங்கு வந்த பிறகும் என் மனைவி திருந்தவில்லை.
என் மனைவி செல்போனில் டிக்டாக் மூலம் பாடியும் நடித்தும் மிமிக்கிரி செய்து வெளியிட்டு அதன்மூலம் பல ஆண் நண்பர்களுடன் தொடர்பில் இருந்தார். அதை நான் பலமுறை கண்டித்தேன். அவள் கேட்கவில்லை. காதலர் தினத்தன்று நான் கார் சவாரி சென்று விட்டேன். அதை சாதகமாக்கிக் கொண்டு ஆண் நண்பர்களுடன் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பினார். இது பற்றி அவரிடம் எச்சரித்தேன். நம் குழந்தைகள் எதிர்காலம் நன்றாக இருக்கவேண்டும் என்ற தவறான பழக்கத்தை நிறுத்துமாறு கூறினேன்.
இதனால் இருவருக்கும் வாய் சண்டை ஏற்பட்டது. அதன் பின் ராஜேஸ்வரி தூங்கி விட்டார். கோபம் தணியாமல் இருந்த நான், இரவு பதினொரு மணிக்கு மேல் பக்கத்தில் இருந்த குழவிக் கல்லை எடுத்து ராஜேஸ்வரி தலையில் போட்டுவிட்டு, அதோடு அங்கிருந்து இரும்பு ராடை எடுத்து தலையில் தாக்கினேன். ராஜேஸ்வரி அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் இறந்து போனார்.
அதையடுத்து என் குழந்தைகளை அழைத்துக்கொண்டு காடாம்புலியூர் சென்றுவிட்டேன் போலீசார் என்னை காடாம்புலியூர் இல் தேடி வந்து கைது செய்தனர் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதே நேரத்தில் போலீசார் தரப்பில் கேட்டபோது, குமரவேல் - ராஜேஸ்வரி காதலித்து திருமணம் கொண்ட பிறகும் குமரவேலு திருநங்கை ஒருவரிடம் பழக்கம் இருந்துள்ளது. இது விஷயமாக ராஜேஸ்வரி குமரவேலிடம் சண்டை போட்டுள்ளார். இதனால் இருவரும் விவாகரத்து வரை சென்று மீண்டும் சேர்ந்து வாழ்ந்துள்ளனர். ராஜேஸ்வரி டிக் டாக் மூலம் மிமிக்ரி செய்து வெளியிட்டு இருப்பது உண்மை. எது எப்படி இருந்தாலும், இரண்டு சிறு குழந்தைகள் இப்போது தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தின் சிதைவு கண்முன்னே நடந்துள்ளது. ராஜேஸ்வரியின் தாயார் சுசிலாவின் புகாரின்பேரில் குமரவேல் கைது செய்து சிறைக்கு அனுப்பி அனுப்பியுள்ளோம் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.