Skip to main content

எலிபேஸ்டை பயன்படுத்தி பெண் போலீஸ் தற்கொலை!

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

police

 

சமீப காலமாக தமிழகம் முழுவதும் தற்கொலை செய்து கொள்வதற்கு பொதுமக்கள் எலி பேஸ்டை பயன்படுத்துகிறார்கள் என்று போலிஸ் துணையோடு தமிழகம் முழுவதும் உள்ள கடைகளில் எலி பேஸ்ட் விற்பனை செய்வதை தடை செய்தனர். மீறி விற்றவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். 

ஆனால் திருச்சியில் ஒரு பெண் போலிஸ் எலிபேஸ்டை பயன்படுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆண்டவர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பவானி. (வயது 35). இவர் கடந்த ஓராண்டாக வையம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை பெண் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடந்த 28ம் தேதி பணியில் இருந்தபோது எலி பேஸ்ட் சாப்பிட்டுள்ளார்.

ஆனால் இதுகுறித்து யாரிடமும் கூறாமல் தொடர்ந்து பணியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கோயமுத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஒரு வழக்கு சம்பந்தமாக காயச்சான்று வாங்கி வரச் சென்ற இவர் திரும்பி வரும் வழியில் திருச்செங்கோட்டில் உடல்நிலை பாதிக்கபட்டதால் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை தனியார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார். 2013 ம் ஆண்டு பாவானியுடன் பணிபுரிந்த பெண் காவலர்கள் இருவருடன் சேர்ந்து ஆன்லைனில் தொழில் தொடங்குவதற்காக பவானி பணம் கொடுத்ததாகவும் தொழில் சரிவர இல்லாமல் பாதியிலேயே நிறுத்தப்பட்டதாகவும், இந்நிலையில் கொடுத்த பணத்தை பலமுறை  திருட்பிக்கேட்டும் அவர்கள் பணத்தை தராததால் மனமுடைந்த பவானி தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக வையம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெண் காவலர் எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

சார்ந்த செய்திகள்