Skip to main content

“கலைஞர் பேனா.. காற்றிலும் எழுதுக..” - நினைவுச் சின்னம் குறித்து வைரமுத்து

Published on 30/04/2023 | Edited on 30/04/2023

 

Vairamuthu on the memorial "Artist pen.. write even in the air.."

 

மறைந்த திமுக தலைவரும் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கலைஞருக்கு நினைவிடம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

அதே நேரம், கலைஞரின் எழுத்தாற்றலைப் போற்றும் வகையில், மெரினா கடற்கரையை ஒட்டியுள்ள கடல் பகுதியில் ரூ.81 கோடி மதிப்பில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது. கலைஞருக்கு பேனா நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு கடற்கரை மண்டல மேலாண்மை ஆணையம் ஒப்புதல் வழங்கியிருந்தது. அதேபோல், பேனா நினைவுச் சின்னத்துக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைத் தமிழ்நாடு பொதுப் பணித்துறை, மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவிடம் தாக்கல் செய்திருந்தது.

 

இந்த நிலையில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்று கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது. கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளத்திடம் தடையில்லாச் சான்று பெற வேண்டுமெனவும் கடலோர பாதுகாப்பு மண்டல விதிகளுக்கு உட்பட்டு கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளது.

 

இந்நிலையில் கலைஞரின் பேனா நினைவுச் சின்னம் குறித்து திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்.  அதில், 

“தமிழர்களை
வான்பார்க்கச் செய்த பேனா

கடலையே மை செய்யும்
தீராத பேனா

கடற்கரை மணலினும்
பெருஞ்சொற்கள் எழுதிய பேனா

ஒன்றிய அமைச்சகத்தின்
ஒப்புதல் பெற்ற பேனா 

முதல்வரின்
திறமைக்கும் பொறுமைக்கும்
சாட்சி சொல்லும் பேனா

கலைஞர் பேனா
காற்றிலும் எழுதுக”

எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்