கல்வி உலகம் நந்தினியை கொண்டாட வேண்டும் என கவிஞர் வைரமுத்து நெகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த +2 பொதுத்தேர்வில் வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினிக்கு கவிஞர் வைரமுத்து தங்க பேனா பரிசளிக்க உள்ளதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று (11.05.2023) காலை திண்டுக்கல் நாகல் நகர் பொன் சீனிவாசன் தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று தங்கப் பேனா பரிசளித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வைரமுத்து, “எளிய குடும்பத்துப் பெண் தமிழ்நாடு அளவில் அறியப்பட்டு யார் நந்தினி என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. எல்லாவற்றுக்கும் காரணம் கல்வி. கல்வியின் வெற்றி கல்வி என்பது மாடத்தின் உச்சத்தில் அல்ல, மாளிகையில் அல்ல. ஏழை குடிசையின் கல்வி என்ற தீபம் உச்சம் நோக்கி எரியும் என்பதற்கு நந்தினி ஒரு எடுத்துக்காட்டு.
நந்தினி பெற்றிருக்கின்ற மதிப்பெண்களை பார்த்தால் வரலாற்றில் யாரும் தொடாதது. ஆறு பாடங்களிலும் நூற்றுக்கு நூறு பெற்று இருப்பது வரலாற்றில் நிகழாதது. முழு மதிப்பெண்ணை பெற்ற நந்தினியை கல்வி உலகம் கொண்டாட வேண்டும். கல்விக்கும் செல்வத்துக்கும் சம்பந்தமில்லை, ஏழ்மை நிலையிலும் கல்வி பெருகிவரும் என்பதற்கு நந்தினி ஒரு எடுத்துக்காட்டு. எல்லா மாணவிகளும் எல்லா மாணவர்களும் வாழ்க்கையில் லட்சியத்தை வைத்துக் கொண்டால் நந்தினி தொட்ட சிகரத்தை பலரும் தொட முடியும்” என தெரிவித்தார்.