Skip to main content

வைகுண்ட ஏகாதசி: விமர்சையாக நடைபெற்ற 8ஆம் திருநாள் விழா!

Published on 21/12/2021 | Edited on 21/12/2021

 

Vaikunda Ekadasi function at srirangam temple

 

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவில் ராப்பத்து 8-ம் திருநாளான இன்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது. சோழப் பேரரசின் தளபதியாகவும், சிற்றரசராகவும் இருந்த திருமங்கை மன்னன், பெருமாள் மீது கொண்ட அளவற்ற பக்தியால் ஸ்ரீரங்கம் கோயிலில் பல்வேறு திருப்பணிகளை செய்துள்ளார்.

 

திருப்பணிக்கு போதுமான நிதியில்லாமல் பணிகள் தொடரமுடியாமல் கவலையடைந்த திருமங்கை மன்னன், வழிப்பறியில் ஈடுபட்டு, அந்த பொருட்களைக் கொண்டு திருப்பணிகளை செய்துள்ளார்.

Vaikunda Ekadasi function at srirangam temple

 

இதை தடுத்து நிறுத்த பெருமாள் மாறுவேடத்தில் வந்தபோது, அவரிடமும் திருமங்கை மன்னன் வழிப்பறி செய்ய முயன்றுள்ளார். அப்போது, மன்னனை திருத்த அவரது காதில் பெருமாள், ‘ஓம் நமோ நாராயணா’ என்ற மந்திரத்தை கூறினார். அதன்பின் வந்திருப்பது பெருமாள் என உணர்ந்த திருமங்கை மன்னன் திருந்தி, அவரது ஆசியோடு திருமங்கையாழ்வாராக மாறியதாக கூறப்படுகிறது.

 

இதை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவில் திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகழாண்டும் இந்தவிழா கோலாகலமாக நடைபெற்றது. நம்பெருமாள் சந்தனு மண்டபத்திலிருந்து தங்கக் குதிரைவாகனத்தில் மாலை 5 மணிக்குப் புறப்பட்டு கோயில் மணல்வெளியில் வையாளி வகையறா கண்டருளி, வேடுபறி நிகழ்ச்சி நடைபெற்றது.

 

 

 

சார்ந்த செய்திகள்