தமிழக சட்டப்பேரவைத் தேர்தல், வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. அதனையொட்டி இறுதிக்கட்டப் பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. இந்நிலையில், அதிமுக- பாஜக கூட்டணியை ஆதரித்துப் பிரச்சாரம் செய்வதற்காக நேற்று தமிழகம் வந்த பிரதமர் மோடி, திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது, ''திமுக, காங்கிரஸ் கூட்டணியை தமிழக மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தமிழக முதல்வரின் தாயை திமுக இழிவுபடுத்தியுள்ளது. இது கண்டிக்தக்கது. பெண்கள் குறித்து திண்டுக்கல் ஐ.லியோனியும் பெண்களைக் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். அவரும் மோசமான கருத்துகளை வெளியிட்டார். திமுக அவரை தடுக்க எதுவும் செய்யவில்லை. திமுக பட்டத்து இளவரசருக்காக, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டுள்ளனர். மார்ச் 25, 1989-ஐ ஒருபோதும் மறக்க வேண்டாம். தமிழக சட்டசபையில், திமுக தலைவர்கள் அம்மா ஜெயலலிதா ஜியை எப்படி நடத்தினார்கள்? திமுக மற்றும் காங்கிரஸ், பெண்கள் முன்னேற்றத்திற்கு உத்தரவாதம் அளிக்கமாட்டார்கள்'' என்றார்.
இந்நிலையில் பிரதமரின் பேச்சு அவரது பதவிக்கு அழகல்ல என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து வைகோ மதுரை பிரச்சாரக் கூட்டத்தில் பேசியதாவது, ''தாராபுரம் கூட்டத்தில் திமுகவை பற்றி மோடி பேசியது அவரது பதவிக்கும், தரத்திற்கும் அழகல்ல. பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு வந்து எதைவேண்டுமானாலும் பேசக்கூடாது. இந்திய அளவில் அதிக குற்றச்செயல்கள் உ.பியில் நடைபெறுவது பிரதமர் மோடிக்குத் தெரியாதா?'' என்றார்.